தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
வரும் 3ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதியில் கிழக்குதிசை காற்றும், மேற்குதிசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமையம் தகவலை வெளியிட்டுள்ளது. மேலும், "வரும் 3ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் கானப்படும் என்றும், நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்கள் கர்நாடகா, கேரளா கடலோர பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதி, லட்சத்தீவு, மாலத்தீவு கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 கிலோமீட்டருக்கும் அதிகமாக வீசக்கூடும் என்பதால், இந்த பகுதிகளில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.