கனமழை பாதிப்பு: 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு
நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நெல்லை,
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நேற்று முன்தினம் தொடங்கி தற்போது வரை மிக, மிக கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் மூழ்கியுள்ளன. குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக திருச்செந்தூர் - தூத்துக்குடி இடையேயான சாலைகளில் இடுப்பளவுக்கு மேல் வெள்ளம் செல்வதால் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இந்த நிலையில், நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2 ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.