காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 28 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு


காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 28 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
x

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதன் காரணமாக அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி,

கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதனிடையே கடந்த 2 நாட்களாக கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான ஓசூர், அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், ராசிமணல், பிலிகுண்டுலு ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

இந்தநிலையில் படிப்படியாக அதிகரித்த நீர்வரத்து நேற்று மாலை 4 மணி நிலவரப்படி வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதன் காரணமாக ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேலும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் மறுஉத்தரவு வரும் வரை சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து திடீரென அதிகரித்துள்ளது. நேற்று காலை அணைக்கு வினாடிக்கு 9 ஆயிரத்து 545 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து மதியம் வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 109.45 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளதன் எதிரொலியாக, இன்று(வியாழக்கிழமை) அணையின் நீர்மட்டம் 110 அடியை எட்டிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story