நாடாளுமன்றத்தில் செங்கோல் வைப்பதால் தமிழர்களுக்கு எந்த பெருமையும் இல்லை - சீமான்


நாடாளுமன்றத்தில் செங்கோல் வைப்பதால் தமிழர்களுக்கு எந்த பெருமையும் இல்லை - சீமான்
x

நாடாளுமன்றத்தில் செங்கோல் வைப்பதால் தமிழர்களுக்கு எந்த பெருமையும் இல்லை என சீமான் கூறினார்.

பேட்டி

தஞ்சை நாஞ்சிக்கோட்டை பைபாஸ் சாலை அருகே 75 அடி உயர நாம் தமிழர் கட்சி கொடியை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்றி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வருமான வரித்துறை சோதனையில் இரு தரப்பிலுமே தவறு உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி கணக்கு வழக்குகளை சரியாக வைத்திருந்தால் வருமானவரித்துறை சோதனை நடத்திக் கொள்ளுங்கள் என கூற வேண்டியது தானே. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடிகர் விஜய் வீட்டில் சோதனை செய்தபோது அவருடைய ரசிகர்கள் இதுபோல் முற்றுகை செய்திருந்தால் எப்படி சோதனை செய்திருக்க முடியும்.

எத்தனையோ அதிகாரிகள், வி.ஐ.பி.க்கள், வீடுகளில், சோதனை நடந்துள்ளது. அனைவருமே பண பலம் படைத்தவர்கள். இதுபோல் யாரும் செய்தது கிடையாது. வருமானவரித்துறை சோதனை செய்ய வரும்போது போலீஸ் சூப்பிரண்டிடம் சொல்லிவிட்டு வரவேண்டிய அவசியம் இல்லை. வருமான வரி அதிகாரிகள் சோதனைக்கு திடீரென தான் வருவார்கள். இது கூட போலீஸ் சூப்பிரண்டுக்கு தெரியாதா? இவரெல்லாம் ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி. வேடிக்கையாக உள்ளது.

ஏமாற்று வேலை

பா.ஜ.க. தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதற்காக தமிழ், தமிழர்கள் என கூவி வருகிறார்கள். சோழர்கள் காலத்தில் இந்த செங்கோல்தான் இருந்ததா?. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த செங்கோலை வைத்து தான் ராஜராஜ சோழன் ஆட்சி நடத்தினாரா?.

ராஜராஜ சோழன் முடியாட்சி காலத்தில் குடியாட்சி நடத்தினார். ஆனால் தற்போது குடியாட்சியில் முடியாட்சி நடத்தி வருகிறார்கள். நாடாளுமன்றத்தில் செங்கோல் வைப்பது என்பது ஒரு ஏமாற்று வேலை.

பெருமை இல்லை

இதனால் தமிழர்களுக்கு எந்த ஒரு பயனும், பெருமையும் இல்லை. செங்கோலை நாடாளுமன்றத்தில் வைக்கும் அவர்கள், தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழன் சிலையை ஏன் உள்ளே வைக்காமல் வெளியே காவலாளி போல் நிறுத்தி இருக்கிறார்கள்.

நேருவிடம் ஆதீனம் இந்த செங்கோலை கொடுத்தார். இத்தனை நாட்களில் தமிழர்களுக்கு என்ன பெருமை சேர்ந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story