ஸ்ரீபெரும்புதூரில் வெடிகுண்டு வீசி ரவுடி கொலை: போலீஸ் தேடிய 5 பேர் கிருஷ்ணகிரி கோர்ட்டில் சரண்


ஸ்ரீபெரும்புதூரில் வெடிகுண்டு வீசி ரவுடி கொலை: போலீஸ் தேடிய 5 பேர் கிருஷ்ணகிரி கோர்ட்டில் சரண்
x

ஸ்ரீபெரும்புதூரில் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட ரவுடி எபினேசர் கொலை வழக்கில் போலீஸ் தேடி வந்த 5 பேர் கிருஷ்ணகிரி கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தனர்.

காஞ்சிபுரம்

பிரபல ரவுடி

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையை சேர்ந்தவர் எபினேசர் (வயது 32). பிரபல ரவுடியான இவர் மீது கடந்த 2020-ம் ஆண்டு திருமழிசை பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவரை கொலை செய்த வழக்கு, கொலை மிரட்டல், அடிதடி, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. மேலும் வெள்ளவேடு போலீஸ் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியாகவும் கண்காணிக்கப்பட்டு வந்தார்.

கடந்த 5-ந் தேதி ஸ்ரீபெரும்புதூர்- அரக்கோணம் சாலையில் மண்ணூர் அருகே ஆட்டோவில் எபினேசர் சென்றுக் கொண்டிருந்தார். அந்த நேரம் மர்ம நபர்கள் ஆட்டோ மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசினார்கள். அவர்களிடம் இருந்து எபினேசர் தப்பி ஓட முயன்றார். ஆனாலும் விடாமல் துரத்திய மர்மநபர்கள் அரிவாளால் சரமாரியாக அவரை வெட்டிக் கொலை செய்தனர்.

5 பேர் சரண்

இந்த கொலை தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் ரவுடி எபினேசர் கொலை தொடர்பாக போலீஸ் தேடி வந்த ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பால் நெல்லூரை சேர்ந்த நாகராஜ் (26), முருகன்சேரி பிரவீண்குமார் (19), கீ.வள்ளூர் சீனிவாசன் (23), பால்நெல்லூர் அசோக் (25), திருவள்ளூர் நாகராஜ் (24) ஆகிய 5 பேர் கிருஷ்ணகிரி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் நீதிபதி ஸ்ரீவத்சவா முன்னிலையில் நேற்று மாலை சரண் அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து சரண் அடைந்த 5 பேரையும் நீதிமன்ற உத்தரவுப்படி, ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.


Next Story