தொடர் விடுமுறை: மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறையால் மாமல்லபுரத்தில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
பட்டம் விடும் விழாவை காண...
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் நகரம் சர்வதேச அளவில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக புராதன நகரமாக திகழ்வதால் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்த நிலையில் சனி, ஞாயிறு, சுதந்திர தினம் என சனிக்கிழமை முதல் இன்று (திங்கட்கிழமை) வரை 3 நாட்கள் நடைபெறும் சர்வதேச பட்டம் விடும் விழாவை காணவும், புராதன சின்னங்களை பார்வையிடவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். குறிப்பாக பட்டம் விடும் விழாவை காண கடந்த 2 நாட்களில் மாமல்லபுரத்திற்கு 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வந்து சென்றதாக சுற்றுலாத்துறையினர் தெரிவித்தனர்.
நேற்று பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் கூட்டத்தால் கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுணன் தபசு, வெண்ணை உருண்டைக்கல் போன்ற புராதன பகுதிகள் மக்கள் கூட்டத்தால் களைகட்டியது.
போக்குவரத்து நெரிசல்
சுற்றுலா பயணிகள் வருகையால் நேற்று கடற்கரை சாலை, ஐந்துரதம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் வியாபாரம் களைகட்டியது. சுற்றுலாத்துறையின் பட்டம் விடும் விழா மைதானம் மற்றும் கடற்ரை பகுதியில் திருட்டு சம்பவங்களை தடுக்க மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன் மேற்பார்வையில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் தலைமையில் ஏராளமான போலீசார் சாதாரண உடையில் கடற்கரை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
சுற்றுலா வாகனங்களால் நேற்று மாமல்லபுரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. கிழக்கு ராஜவீதி, மேற்கு ராஜ வீதி, கடற்கரை சாலை பகுதியில் கடும் நெரிசலில் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மெதுவாக ஊர்ந்து சென்றன. மாமல்லபுரம் பஸ் நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையின் நுழைவு வாயில் பகுதி வரை 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் சாலையில் அணி வகுத்து நின்றன. இதனால் சாலையில் சென்ற வாகனங்களை நெரிசலில் சிக்கிவிடாமல் இருக்க போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர்.