ஆஸ்திரேலியாவில் சுட்டுக்கொல்லப்பட்ட அதிராம்பட்டினம் வாலிபர் குறித்த உருக்கமான தகவல்கள்


ஆஸ்திரேலியாவில் சுட்டுக்கொல்லப்பட்ட அதிராம்பட்டினம் வாலிபர் குறித்த உருக்கமான தகவல்கள்
x

ஆஸ்திரேலியாவில், போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட அதிராம்பட்டினத்தை சேர்ந்த வாலிபர் குறித்த உருக்கமான தகவல்கள் கிடைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் 32 வயதான இந்தியர் ஒருவர் நேற்று முன்தினம் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டவர் பெயர் முகமது ரகமத்துல்லா என்றும், தமிழகத்தை சேர்ந்தவர் என்றும் இந்திய தூதரக அதிகாரிகள் அடையாளம் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் சிட்னி மேற்கு ரெயில் நிலையத்தில் ரெயிலுக்காக காத்திருந்தபோது 28 வயதான துப்புரவு தொழிலாளி ஒருவரை முகமது ரகமத்துல்லா, கத்தியால் குத்தி உள்ளார். இதையடுத்து அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் இருந்து 2 போலீசார் அவரை பிடிப்பதற்காக நெருங்கி வந்துள்ளனர். அப்போது அவர்களையும் முகமது ரகமத்துல்லா தாக்க முயன்றதாக தெரிகிறது.

இதனையடுத்து போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் முகமது ரகமத்துல்லாவின் நெஞ்சில் 2 துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததில் அவர் அந்த இடத்திலேயே பலியானார்.

போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட முகமது ரகமத்துல்லா (32), தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அம்பேத்கர் நகரை சேர்ந்த சையது அகமது என்பவரது மகன் ஆவார்.

பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ள இவர், மேற்படிப்புக்காக கடந்த 3½ வருடங்களுக்கு முன்பு மாணவர் விசாவில் ஆஸ்திரேலியா நாட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு படித்துக்கொண்டே அங்குள்ள ஒரு உணவகத்தில் பகுதி நேரமாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இவர் போலீசாரை தாக்க முயன்றபோது போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டது தெரிய வந்தது.

முகமது ரகமத்துல்லாவின் தந்தை சையது அகமது இறந்து விட்டார். தாய் ஆமீனம்மாள் மற்றும் ஒரு அண்ணன், 2 அக்காள்கள் உள்ளனர். அண்ணன் ஷபில், சென்னையில் டிராவல்ஸ் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார்.


Next Story