ஈஷாவுக்கு எப்படி விலக்கு அளிக்கலாம்?" - மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு


ஈஷாவுக்கு எப்படி விலக்கு அளிக்கலாம்?  - மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 27 Sep 2022 12:08 PM GMT (Updated: 27 Sep 2022 12:15 PM GMT)

ஈஷா அறக்கட்டளையின் கட்டிடங்கள் எவ்வாறு விலக்கு அளிக்கும் பகுதியின்கீழ் கொண்டு வரப்பட்டன என சென்னை ஐகோர்ட்டு கேள்வியெழுப்பியுள்ளது.

சென்னை,

ஈஷா அறக்கட்டளையால் கல்வி நோக்கத்திற்காக கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதால், சுற்றுச்சூழல் அனுமதி பெறவேண்டுமென்ற விதியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.

விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டியதற்காக ஏன் வழக்கு தொடரக்கூடாது என விளக்கம் கேட்டு, ஈஷா அறக்கட்டளைக்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்த நோட்டீசுக்கு தடை விதிக்கக்கோரி ஈஷா அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமனறத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஈஷா யோகா மையத்திற்கு எதிரான நோட்டீஸ் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கக் கூடாது இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஈஷா அறக்கட்டளையால் கல்வி நோக்கிலே கட்டடங்கள், மாணவர் விடுதி கட்டப்பட்டுள்ளதால், சுற்றுச்சூழல் அனுமதி பெறவேண்டும் என்ற விதியில் இருந்து ஈஷா அறக்கட்டளைக்கு விலக்கு அளிக்கப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது பேசிய நீதிபதிகள், சட்டத்தை உருவாக்கிவிட்டு பின்னர் அதிலிருந்து விலக்கு அளிப்பதா? என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியதுடன், ஈஷா அறக்கட்டளையின் கட்டிடங்கள் எவ்வாறு விலக்கு அளிக்கும் பகுதியின்கீழ் கொண்டு வரப்பட்டன? என விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தனர்.


Next Story