வடகிழக்கு பருவமழை பாதிப்பில் இருந்து தப்பிப்பது எப்படி?-கலெக்டர் அறிவுரை


வடகிழக்கு பருவமழை பாதிப்பில் இருந்து தப்பிப்பது எப்படி?-கலெக்டர் அறிவுரை
x

அரியலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் போது பாதிப்பில் இருந்து தப்பிப்பது எப்படி? என்று மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா அறிவுரை வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அரியலூர்

வடகிழக்கு பருவமழை

அரியலூர் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழையானது வருகிற 22-ந்தேதி முதல் 25-ந்தேதிக்குள் தொடங்க உள்ளதால், கனமழையின் போது ஏற்படும் இடி, மின்னல் மற்றும் வெள்ளத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வழிகாட்டுதல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இடி ஏற்படும் போது, கான்கிரீட் கட்டிடத்திற்குள்ளோ அல்லது கனத்த மேற்பகுதியுள்ள வாகனங்களுக்குள் சென்று ஜன்னல் கண்ணாடிகளை மூடிக்கொள்ளவும். தகரக்கூரை உடைய இடங்களை தவிர்க்க வேண்டும். ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும். வயல்வெளியில் இருந்தால், அருகிலுள்ள காய்ந்த நிலப்பரப்பிற்கு செல்லவும்.

பாதுகாப்பான மறைவிடம் எதுவும் இல்லையெனில், உயரமான பொருட்களுக்கு அருகிலோ, தனி மரங்களுக்கு அருகிலோ செல்லாமல் திறந்த வெளியில் இருந்திட வேண்டும். அவ்வாறு திறந்தவெளியில் இருக்கும் போது கால்களை மடக்கி குத்தவைத்து அமர்ந்து, கைகளால் கால்களை சுற்றி, காதுகள் மற்றும் கண்களை மூடி, தலை கவிழ்ந்த நிலையில் அமர வேண்டும். மேலும் மின்கம்பிகள், செல்போன் டவர், காற்றாலை தகடுகள், இரும்பு வேலிகள், அறுந்து கிடக்கும் மின்கம்பிகள் போன்றவற்றிலிருந்தும் விலகியிருக்க வேண்டும். குழுவாக இருத்தல் கூடாது.

கட்டுப்பாட்டு மையம்

வெள்ளம் ஏற்படும் போது, வானிலை குறித்த செய்திகளுக்கு வானொலி, தொலைக்காட்சி மற்றும் நாளேடுகளை கவனித்து வர வேண்டும். ஆடு, மாடு போன்ற வளர்ப்பு பிராணிகளை கட்டிப்போடாமல் வைத்திருக்கவும். அருகிலுள்ள முகாம்கள் அல்லது உயரமான இடங்களில் உள்ள வீடுகளுக்கு செல்லும் பாதுகாப்பான வழித்தடத்தையும், திடீர் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ள கால்வாய், ஓடை, வடிகால் போன்றவற்றையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

கொதிக்க வைத்த நீரையே பருக வேண்டும். சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வெள்ள நீரிலோ அல்லது அதன் அருகிலோ குழந்தைகளை விளையாட அனுமதிக்கக்கூடாது. வடகிழக்கு பருவமழையின் போது பேரிடர் தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் செயல்படக்கூடிய பேரிடர் கால கட்டுப்பாட்டு மையத்தை கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 04329228709 என்ற எண்ணுக்கோ 9384056231 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கோ பொதுமக்கள் தொடர்பு கொண்டு தகவல் மற்றும் புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story