'ஜெய்பீம் திரைப்படம் குறித்து பிரகாஷ் ராஜ் கூறிய கருத்தை வழிமொழிகிறேன்' - திருமாவளவன் பேட்டி


ஜெய்பீம் திரைப்படம் குறித்து பிரகாஷ் ராஜ் கூறிய கருத்தை வழிமொழிகிறேன் - திருமாவளவன் பேட்டி
x

‘ஜெயபீம்’ படத்திற்கு தேசிய விருது வழங்கப்படாதது குறித்து பிரகாஷ் ராஜ் கூறிய கருத்தை வழிமொழிவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

69-ஆவது தேசிய திரைப்பட விருதுகளுக்கான அறிவிப்பு கடந்த வியாழக்கிழமை வெளியானது. தேசிய விருது வென்றவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களுக்கு விருது அறிவிக்கப்படாது குறித்து சிலர் ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் வெளிப்படுத்தினர்.

அந்த வகையில், இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, மணிகண்டன் உள்ளிட்டோர் நடித்த 'ஜெய்பீம்' படத்திற்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என்று ரசிகர்களும், சினிமா விமர்சகர்களும் எதிர்பார்த்த நிலையில், அந்த படத்திற்கு தேசிய விருது வழங்காதது குறித்து திரைத்துறை பிரபலங்கள் பலர் வருத்தம் தெரிவித்திருந்தனர்.

இதனிடையே நடிகர் பிரகாஷ் ராஜ் 'ஜெயபீம்' படத்திற்கு தேசிய விருது வழங்கப்படாதது குறித்து தனது டுவிட்டர் பதிவில், "காந்தியைக் கொன்றவர்கள், இந்திய அரசியலமைப்பை தந்த அம்பேத்கரின் சமத்துவ தத்துவத்தை கொல்ல முயற்சிப்பவர்கள் ஜெய்பீம் திரைப்படத்திற்கு எப்படி விருது தருவார்கள்?" என்று பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜின் கருத்தை வழிமொழிவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஜெய்பீம் படத்தின் கருத்து ஒருபுறம் இருந்தாலும் கூட, அந்த படம் வெகுஜன மக்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய படம். அதில் நடித்த நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள், இசை மிகச்சிறப்பாக இருக்கிறது. அனைவரின் பாராட்டையும் பெற்ற ஒரு படம். அந்த படத்திற்கு விருது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருந்தது. இந்நிலையில் விருது கிடைக்காததால் இத்தகைய விமர்சனங்கள் வருகிறது" என்று தெரிவித்தார்.




Next Story