திமுகவில் இருந்து நான் வெளியேறவில்லை, வெளியேற்றப்பட்டேன் - வைகோ


திமுகவில் இருந்து நான் வெளியேறவில்லை, வெளியேற்றப்பட்டேன் - வைகோ
x

தமிழகத்தில் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது என வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

சிவகாசி,

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் நடந்த மதிமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு திருமண வாழ்க்கை என்பது வேறு விதமாக இருந்தது. ஆனால் தற்பொழுது நிலைமை வேறு மாதிரியாக இருக்கிறது. திருமணம் முடிவு செய்யப்பட்டதும் மணமகனும், மணமகளும் தொலைபேசி மூலமாக மணி கணக்கில் பேச தொடங்கி விடுகிறார்கள். இது ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

இன்றைய காலகட்டத்தில் தமிழர்களின் பண்பாடும், ஒழுக்கமும் சிதைந்து கொண்டு வருகிறது. தமிழகம் மோசமான நிலைக்குப் போய்க் கொண்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் இதே நிலைதான் உள்ளது. தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியை சிறப்பாக நடத்தி வருகிறார். ஒவ்வொரு நாளும் ஒரு அறிவிப்பு வருகிறது. இன்று 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு என்று அறிவித்துள்ளார். அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது

திமுகவிற்காக நானும் 21 ஆண்டுகள் பாடுபட்டேன். விதியின் விளையாட்டால் நான் திமுகவிலிருந்து வெளியேறிய வேண்டிய நிலை ஏற்பட்டது. நான் வெளியேறவில்லை. வெளியேற்றப்பட்டேன். தற்போது மீண்டும் இணைந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறேன். நம்மிடையே ஜாதியின், மதத்தின் பெயராலோ சச்சரவுகள் இருக்கக்கூடாது.

மதம் என்பது அவரவர் நம்பிக்கை. மதம் என்பது தமிழர்களுடைய பண்பாட்டை சீரழிக்கும் விதமாக இருக்கக்கூடாது. குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வையுங்கள். தமிழைக் கற்றுக் கொடுங்கள். தமிழை எழுத சொல்லி பழக்குங்கள். தற்போது தமிழகத்தில் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இது மிகப்பெரிய கேடு விளைவிக்க கூடும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story