அண்ணாமலை மீது நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு தொடர்வேன்: திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பரபரப்பு பேட்டி


அண்ணாமலை மீது நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு தொடர்வேன்: திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பரபரப்பு பேட்டி
x

அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்டதற்காக அண்ணாமலைக்கு திமுக எம்.பி. டி.ஆர்.பாலு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

சென்னை,

திமுகவின் சொத்து மற்றும் ஊழல் பட்டியலை பாஜக தலைவர் அண்ணாமலை சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வெளியிட்டார். திமுக அமைச்சர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை, யார் யாருக்கு எவ்வளவு கோடி சொத்து என ஒரு வீடியோவை வெளியிட்டார்.

இதனை முற்றிலும் மறுத்த திமுக தரப்பு, அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன் இந்த நோட்டீசை அனுப்பி இருந்தார். அதேபோல் பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து உதயநிதி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது

இதனிடையே அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்டதற்காக அண்ணாமலை 100 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், அவதூறு பரப்பும் வகையில் வீடியோ வெளியிட்டதற்காக, அண்ணாமலை பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர்.பாலு. பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அனுப்பிய அவதூறு நோட்டீசுக்கு இதுவரையில் பதில் ஏதும் வரவில்லை என தெரிவித்துள்ளார்.

உரிய பதில் அளிக்காததால், அண்ணாமலை மீது வரும் 8ம் தேதி, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு தொடர்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story