காவிரி நீரை பெற முடியாவிட்டால் இந்தியா கூட்டணியில் இருந்து தி.மு.க. வெளியேற வேண்டும்- ஆர்.பி.உதயகுமார் பேட்டி


காவிரி நீரை பெற முடியாவிட்டால் இந்தியா கூட்டணியில் இருந்து தி.மு.க. வெளியேற வேண்டும்- ஆர்.பி.உதயகுமார் பேட்டி
x

காவிரி நீரை பெற முடியாவிட்டால் இந்தியா கூட்டணியில் இருந்து தி.மு.க. வெளியேற வேண்டும் என்று ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

மதுரை


தரமற்ற அரிசி

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் ஒருவர் கூட பட்டினி இருக்க கூடாது என்பதற்காக 20 கிலோ விலையில்லா அரிசி வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா கொண்டு வந்தார். ஆனால் தற்போது அந்த திட்டம் சரியாக செயல்படுத்தப்படவில்லை. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து தரமற்ற அரிசிகளை வழங்குவதாக பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர். ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமானதாக இருக்கும் என்றும், உணவு பொருட்கள் பொட்டலம் போட்டு வழங்கப்படும் என்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறியிருந்தார். ஆனால் தரமான அரிசி வழங்கப்படவில்லை. அதே நேரத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படும் சம்பவம் அதிகரித்து விட்டது. அதனையும் தி.மு.க. அரசு கட்டுப்படுத்த வில்லை.

எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்த போது நீரின் முக்கியத்துவம் அறிந்து குடிமராமத்து திட்டபணிகளை நிறைவேற்றி நீரினை சேமித்தார். அதே போல் காவிரியில் குறித்த நேரத்தில் நீரினை பெற்று டெல்டா விவசாயிகள் வாழ்வில் ஒளியேற்றினார். ஆனால் தி.மு.க. அரசு காவிரியில் தமிழகத்திற்கான உரிமையை இழந்து விட்டது. கர்நாடகாவில் தி.மு.க.வின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆட்சிதான் நடக்கிறது. அவர்கள் இந்தியா கூட்டணி பெயரில் ஒன்றிணைந்து இருக்கிறார்கள். கர்நாடக காங்கிரஸ் அரசு தண்ணீரை திறந்து விட வேண்டும், இல்லை என்றால் இந்தியா கூட்டணியிலிருந்து வெளியேறுவோம் என்று நிபந்தனையை தி.மு.க. விதித்து இருக்க வேண்டாமா?

சோனியா காந்தி

ஆம் ஆத்மி கட்சி கட்சி, இந்தியா கூட்டணியில் இணைந்து போது டெல்லியில் கொண்டு வரப்பட்ட மத்திய அரசின் சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் இருக்க வேண்டும். அப்போது தான் இந்தியா கூட்டணியில் இணைவோம் என்றனர். அதனை காங்கிரஸ் ஏற்று கொண்ட பிறகு தான் ஆம் ஆத்மி கட்சி இந்தியா கூட்டணியில் இணைந்தது. அதே போல் கர்நாடக அரசு காவிரியில் உரிய நீரை திறந்தால் தான் இந்தியா கூட்டணியில் இணைவோம் என்று தி.மு.க. சொல்லி இருக்க வேண்டும். தி.மு.க. மகளிர் மாநாட்டில் கலந்து கொண்ட சோனியாகாந்தியிடம் முறையிட்டு காவிரி நீரை பெற்று தந்து இருக்க வேண்டும்.

தமிழர்களுக்கான உரிமையை பெற்று தர முடியாத தி.மு.க. அரசு, இந்தியா கூட்டணியில் இருப்பதால் தமிழர்களுக்கு என்ன பயன்?. எனவே அவர்கள் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story