தொடர்ந்து முயற்சித்தால் வாழ்வில் சாதிக்க முடியும்-நான் முதல்வன் திட்ட முகாமில் கலெக்டர் கார்மேகம் பேச்சு
தொடர்ந்து முயற்சித்தால் வாழ்வில் சாதிக்க முடியும் என்று சேலத்தில் நடந்த நான் முதல்வன் திட்ட சிறப்பு முகாமில் கலெக்டர் கார்மேகம் பேசினார்.
நான் முதல்வன் திட்டம்
சேலம் மாவட்டத்தில் 2022-2023-ஆம் கல்வி ஆண்டில் மேல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேராத மாணவர்களுக்கான 'நான் முதல்வன் - மாணவர்களின் உயர்வுக்கு படி' சிறப்பு முகாம் ஏற்காடு அடிவாரத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடந்தது.
நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் கார்மேகம் பேசியதாவது:-
நான் முதல்வன் திட்டம் என்பது அனைத்து அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களின் உயர்க்கல்வி கனவை நனவாக்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 2022-2023-ம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு பயின்று உயர்கல்வியில் சேராத மாணவர்களுக்காக "நான் முதல்வன் உயர்வுக்கு படி" எனும் நிகழ்ச்சி சேலம், மேட்டூர், சங்ககிரி மற்றும் ஆத்தூர் வருவாய் கோட்டம் வாரியாக4 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக, சேலம் வருவாய் கோட்டத்திற்குட்டப்பட்ட 47 அரசு, அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் 950 மாணவர்களுக்கான "நான் முதல்வன் உயர்வுக்கு படி" எனும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இலவச பயிற்சி வகுப்புகள்
சேலம் மாவட்டத்தில் சுமார் 5 லட்சத்து 91 ஆயிரத்து 848 மாணவ, மாணவிகள் பள்ளிகளிலும், 46 ஆயிரத்து 930 மாணவ, மாணவிகள் கலை அறிவியல் கல்லூரிகளிலும், 44 ஆயிரத்து 695 மாணவ, மாணவிகள் தொழிற்கல்வி மையத்திலும் பயின்று வருகின்றனர். பல்வேறு காரணங்களால் உயர்கல்வியில் இணைந்து படிக்க இயலாத மாணவர்களின் விவரங்களை அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மூலம் தொடர்பு கொண்டு கல்விக்கடன் தேவைப்படும் மாணவ, மாணவிகளுக்கு உதவிகள் வழங்கப்படும்.
மேலும் எந்தெந்த துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகளவில் உள்ளது என்பது குறித்தும், அரசு நடத்தும் போட்டி தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் வழங்கப்படுவது குறித்தும் வேலைவாய்ப்பு மண்டல இணை இயக்குனர் பேசினார். குடும்ப சூழ்நிலையால் மேற்படிப்பை தொடர இயலாதவர்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலர் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் மூலம் தேவையான நடவடிக்கைகள் இம்முகாமின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உயர்ந்த பதவிகளில்...
இதுதவிர, திறன் மேம்பாட்டு பயிற்சிகள் உள்ளிட்ட மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு துறை வல்லுனர்களை கொண்டு சிறப்பு விளக்கம் அளிக்கப்படுகிறது. குறிப்பாக அரசுப்பள்ளியில் பயின்ற என்னைப் போன்ற பலர் இன்று உயர்ந்த பதவிகளில் உள்ளதை மாணவர்கள் உணர்ந்து கொண்டு கல்வி ஒன்றே உயர்விற்கு உறுதுணையாக இருக்கும் என்பதையும், தொடர்ந்து முயற்சித்தால் இங்கு வருகை புரிந்துள்ள ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் சாதிக்க முடியும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அலர்மேல்மங்கை, சேலம் உதவி கலெக்டர் அம்பாயிரநாதன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கபீர், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய மண்டல இணை இயக்குனர் லதா, முன்னோடி வங்கி மேலாளர் இளவரசு, மாவட்ட சமூக நல அலுவலர் ஜெனிபர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.