'இளையராஜா எல்லோருக்கும் மேலானவர்தான்' - ஐகோர்ட்டில் காரசார வாதம்


இளையராஜா எல்லோருக்கும் மேலானவர்தான் - ஐகோர்ட்டில் காரசார வாதம்
x

இளையராஜா எல்லோருக்கும் மேலானவர்தான் என்றும் வீம்புக்காக இதனை சொல்வதாக நினைக்க வேண்டாம் என்றும் ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை,

இசையமைப்பாளர் இளையராஜாவின் சுமார் 4,500 பாடல்களை பயன்படுத்துவதற்காக எக்கோ, அகி உள்ளிட்ட நிறுவனங்கள் சார்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஒப்பந்தத்திற்கான காலம் முடிந்த பிறகும் காப்புரிமை இல்லாமல் தனது பாடல்களை பயன்படுத்தியதாக எக்கோ, அகி உள்ளிட்ட நிறுவனங்கள் மீது சென்னை ஐகோர்ட்டில் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தயாரிப்பாளர்களிடம் உரிமை பெற்று இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளதாகவும், இளையராஜாவுக்கும் இந்தப் பாடல்கள் மீது தனிப்பட்ட தார்மீக சிறப்பு உரிமை இருப்பதாகவும் கடந்த 2019-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனு இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்துவதற்கு இரண்டு இசை நிறுவனங்களுக்கும் தடை விதித்து உத்தரவிட்டனர்.

இதையடுத்து பாடல்களின் காப்புரிமை தயாரிப்பாளரிடமிருந்து பெறப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த தங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்றும் கூறி, இந்த தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் எக்கோ நிறுவனம் சார்பில் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி மகாதேவன், நீதிபதி முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இசை நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜயநாராயணன், "இந்திய திரைப்படத் துறையில், இசையமைப்பாளர்கள் ஒரு படத்தில் இசையமைத்ததற்காக தயாரிப்பாளரிடம் இருந்து ஊதியம் பெற்றவுடன், ராயல்டி பெறும் உரிமையை தவிர அனைத்து உரிமைகளையும் இழந்து விடுகிறார்கள்" என்று வாதிட்டார்.

மேலும், "காப்புரிமை சட்டத்தின் கீழ் பாடல்களின் உரிமையாளராக இளையராஜா வருவாரா? என்பதை இந்த வழக்கின் இறுதி விசாரணையில்தான் முடிவு செய்ய முடியும். இளையராஜா ஒரு 'இசைஞானி' என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் இசை நிறுவனங்கள் தரப்பை பொறுத்தவரை 1970, 80, 90-களில் அவரது பாடல்களுக்கு இருந்த ஈர்ப்பு தற்போது இல்லை. இளையராஜா தன்னை எல்லாருக்கும் மேலானவர் என நினைக்கிறார்" என்று குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த இளையராஜா தரப்பு வழக்கறிஞர், "ஆம், இளையராஜா எல்லோருக்கும் மேலானவர்தான். வீம்புக்காக இதனை சொல்வதாக நினைக்க வேண்டாம்" என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.




Next Story