சட்டவிரோத பண பரிமாற்றம்: அமைச்சர் பொன்முடி மகன் மீதான வழக்கு சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றம் - விசாரணை 11-ந் தேதிக்கு தள்ளிவைப்பு


சட்டவிரோத பண பரிமாற்றம்: அமைச்சர் பொன்முடி மகன் மீதான வழக்கு சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றம் - விசாரணை 11-ந் தேதிக்கு தள்ளிவைப்பு
x

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் மகனும், தி.மு.க. எம்.பி.யுமான கவுதம சிகாமணிக்கு எதிரான சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கு சென்னை சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டுள்ளது.

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கடந்த 2006-2011-ம் ஆண்டுகளில் கனிம வளங்கள் மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

அப்போது, செம்மண் குவாரியில் விதிகளுக்கு புறம்பாக அதிகளவில் செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உள்பட 8 பேர் மீது 2012-ம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

விழுப்புரம் கோர்ட்டில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை அடிப்படையாக கொண்டு அமலாக்கத்துறையினர் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி தொடர்புடைய இடங்களில் கடந்த மாதம் சோதனை நடத்தினர்.

சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் நடந்த சோதனைகளை தொடர்ந்து அமைச்சர் பொன்முடி சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து வரப்பட்டு விசாரிக்கப்பட்டார்.

விசாரணை முடிவில், செம்மண் முறைகேடு தொடர்பாக கிடைத்த பெரும் தொகை ஹவாலா பரிவர்த்தனைகள் மூலம் வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்தது.

மேலும், முக்கிய ஆவணங்களும், 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிரிட்டன் பவுண்ட்கள் உள்ளிட்ட 81 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், ரூ.41 கோடியே 90 லட்சம் வங்கி நிரந்தர வைப்பீடு முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை அறிவித்தது.

இதைத்தொடர்ந்து சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி தி.மு.க. எம்.பி.யுமான கவுதம சிகாமணி உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக அமலாக்கத்துறை, சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் 90 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கவுதம சிகாமணி எம்.பி.யாக இருப்பதால் இந்த வழக்கை சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றி சென்னை செசன்சு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இந்த வழக்கு வருகிற 11-ந் தேதி சிறப்பு கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.


Next Story