அரசு பள்ளியில்தலைமை ஆசிரியரை கண்டித்து போராட்டம் நடத்திய பெற்றோர்


அரசு பள்ளியில்தலைமை ஆசிரியரை கண்டித்து போராட்டம் நடத்திய பெற்றோர்
x

மாலைக்கோடு அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியரை கண்டித்து பெற்றோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக பத்மநாபபுரம் சப்-கலெக்டர் விசாரணை நடத்தினார்.

கன்னியாகுமரி

அருமனை,

மாலைக்கோடு அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியரை கண்டித்து பெற்றோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக பத்மநாபபுரம் சப்-கலெக்டர் விசாரணை நடத்தினார்.

உணவுத்திட்டத்துக்கு பணம் வசூல்

அருமனை அருகே இடைக்கோடு பேரூராட்சிக்கு உட்பட்ட மாலைக்கோடு பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் மாணவர்களிடம் காலை சிற்றுண்டிக்கு பணம் வசூல் செய்ததாக புகார் எழுந்தது. மேலும், பள்ளி மாணவி ஒருவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதையறிந்த மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று இதுபற்றி கேட்டுள்ளனர். ஆனால், அவர்களிடம் தலைமை ஆசிரியை முறையாக பதில் கூறாமல் பிரச்சினை செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் நியமிக்கப்பட்ட ஆசிரியரை பணி நீக்கம் செய்யும் முயற்சியிலும் தலைமை ஆசிரியர் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த பெற்றோர்கள் தலைமை ஆசிரியருக்கு எதிராக பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பள்ளி கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கும் புகார்கள் அனுப்பப்பட்டன.

சப்-கலெக்டர் விசாரணை

இந்த நிலையில் நேற்று காலையில் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக் தலைமையில் விளவங்கோடு தாசில்தார் குமாரவேல், வட்டார கல்வி அலுவலர் ஆகியோர் பள்ளிக்கு நேரில் வந்து விசாரணை நடத்தியதுடன், பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினா். பின்னர் வருகிற 20-ந்தேதி பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் கூட்டம் நடத்துவதாகவும், அதில் இதற்கு முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டது. இதையடுத்து இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது.


Next Story