சென்னையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை


சென்னையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
x
தினத்தந்தி 5 March 2024 7:49 AM IST (Updated: 5 March 2024 1:00 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை,

சென்னையில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை மண்ணடி, முத்தையால் பேட்டை உள்ளிட்ட இடங்களில், தேசிய புலனாய்வு முகமையினர் சோதனை நடத்தி வருகின்றனர். பெங்களூரு வெடிகுண்டு விபத்து தொடர்பாக இந்த சோதனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைபோல ராமேசுவரத்திலும் என்.ஐ.ஏ. சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

பெங்களூரு குண்டு வெடிப்பு:-

பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே புரூக்பீல்டு பகுதியில் ராமேஸ்வரம் கபே ஓட்டல் உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், இந்த ஓட்டலில் கை கழுவும் இடத்தில் கடந்த 1-ந் தேதி அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்து சிதறின. இதில், பெண்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்திருந்தார்கள். அவர்களுக்கு தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த குண்டுவெடிப்புக்கு பின்னணியில் எந்த பயங்கரவாத அமைப்பு இருக்கிறது?, என்ன காரணத்திற்காக குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்த மர்மநபர் ராமேஸ்வரம் கபே ஓட்டலை தேர்வு செய்தார்? உள்ளிட்ட தகவல்களும் தெரியாமல் மர்மமாக இருந்து வருகிறது.

குண்டுவெடிப்பை நிகழ்த்திவிட்டு மர்மநபர் தமிழ்நாடு அல்லது கேரளாவுக்கு தப்பி சென்றிருக்கலாம் என்பதால், 2 தனிப்படை போலீசார் அந்த மாநிலங்களில் முகாமிட்டும் மர்மநபரை தேடி வருகிறார்கள். வெடிகுண்டு வைத்து விட்டு தப்பி சென்ற நபர் இன்னும் கைது செய்யப்படவில்லை. இந்த வழக்கை தற்போது என்.ஐ.ஏ.(தேசிய புலனாய்வு முகமை) விசாரித்து வருகிறது.

1 More update

Next Story