போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற தம்பதி மீது வழக்கு
தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற தம்பதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தீக்குளிக்க முயற்சி
ஏரல் அருகே உள்ள சூளைவாய்க்காலை சேர்ந்தவர் மிக்கேல்ராஜ் (வயது 30). இவருடைய மனைவி வைத்தீசுவரி (28). இவர்கள் தங்களை சிலர் தாக்கியதாவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி மனு கொடுப்பதற்காக நேற்று முன்தினம் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு திடீரென 2 பேரும் தீக்குளிக்க முயன்றார்களாம்.
வழக்கு
உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் 2 பேரையும் மீட்டு தூத்துக்குடி சிப்காட் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் போலீஸ் நிலையங்களில் எந்தவித புகாரும் அளிக்காமல் நேரடியாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து தீக்குளிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து கணவன், மனைவி 2 பேர் மீதும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.