தொழிற்சாலை சுவரில் துளையிட்டு இரும்பு பொருட்கள் திருடிய வழக்கில் - இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் கைது


தொழிற்சாலை சுவரில் துளையிட்டு இரும்பு பொருட்கள் திருடிய வழக்கில் - இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் கைது
x

தொழிற்சாலை சுவரில் துளையிட்டு இரும்பு பொருட்கள் திருடிய வழக்கில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலை உள்ளது. இங்கு மேம்பால பணிகளுக்கான கட்டுமானத்தின் போது அவற்றை இணைக்கும் உயர்தர இரும்பு பிளேட்டுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

கடந்த 10-ந் தேதி நள்ளிரவில் தொழிற்சாலையின் பக்கவாட்டு மதில் சுவரில் துளையிட்டு அதன் வழியாக 12 டன் எடை கொண்ட உயர்தர இரும்பு பிளேட்டுகளை திருடி சென்றனர். திருட்டு போன இரும்பு பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும்.

சம்பவ இடத்தில் இருந்து ஒவ்வொரு இரும்பு பிளேட்டாக ஒருவர் எடுத்து சென்று மற்றொரு நபருக்கு கைமாற்றும் காட்சி கண்காணிப்பு கேமராவில் தொளிவாக பதிவாகி உள்ளது. திருடப்பட்ட இரும்பு பொருட்களை வாகனத்தின் மூலம் அங்கிருந்து மர்ம நபர்கள் கொண்டு சென்றிருப்பதும், மர்ம நபர்கள் சிலர் திட்டமிட்டு இந்த திருட்டில் ஈடுபட்டிருப்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது குறித்து இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணி தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா பதிவு காட்சியின் அடிப்படையில் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், மேற்கண்ட திருட்டு பொருட்களை மர்ம நபர்களிடம் இருந்து வாங்கி அதனை கும்மிடிப்பூண்டி பெத்திக்குப்பம் பகுதியை சேர்ந்த ஒரு காயலான் கடையில் விற்பனை செய்ததாக கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த விமல் நேசராஜ் (வயது 42) என்பவரை நேற்று இரவு கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் கைது செய்தனர். காயலான் கடை உரிமையாளாரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story