2026-ம் ஆண்டில் பா.ம.க. ஆட்சி அமையும்: 'பாட்டாளி மாடல்' கொள்கையை வடிவமைத்து வருகிறோம் - டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேச்சு


2026-ம் ஆண்டில் பா.ம.க. ஆட்சி அமையும்: பாட்டாளி மாடல் கொள்கையை வடிவமைத்து வருகிறோம் - டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேச்சு
x

2026-ம் ஆண்டில் பா.ம.க. ஆட்சி அமையும் என்றும், ‘பாட்டாளி மாடல்’ கொள்கையை வடிவமைத்து வருவதாகவும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

பா.ம.க. புதிய தலைவராக பொறுப்பேற்ற டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-

43 ஆண்டுகளாக தமிழக மக்களின் உரிமைகளுக்காக போராடி வரும் டாக்டர் ராமதாஸ் கொள்கைகளை கடைபிடித்து, இந்த கட்சியை அடுத்த கட்டத்துக்கு முன்னோக்கி கொண்டு செல்வேன். கட்சி தலைவராக அல்ல, தொண்டர்களோடு தொண்டர்களாக செயல்படுவேன். தமிழகத்தில் ஆட்சி-அதிகாரத்தில் இல்லாதபோதே, நான் மத்திய மந்திரியாக இருந்தபோது எத்தனையோ நல்ல திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறேன். ஆட்சி-அதிகாரம் இருந்தால் இன்னும் பல மடங்குகள் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்திடலாம்.

டாக்டர் ராமதாஸ் அறிவுரையின்படி 'பா.ம.க. 2.0' என்ற செயல்திட்டத்தை செயல்படுத்துவோம். உறுதியாக சொல்கிறேன், கட்சியின் தலைவர் பொறுப்பேற்று நான் மிகவும் நேர்மையாக செயல்படுவேன். அதே நேர்மையை உங்களிடமும் எதிர்பார்ப்பேன். இவை தவறும் பட்சத்தில் நிச்சயம் கடும் நடவடிக்கை எடுப்பேன். 'பா.ம.க. 2.0' செயல்திட்டமே இதுதான்.

தமிழகத்தின் நீடித்த வளர்ச்சியே பா.ம.க.வின் முக்கிய கொள்கை ஆகும். 2026-ம் ஆண்டில் பா.ம.க. ஆட்சி தமிழகத்தில் நடைபெறும். அதற்கேற்ப நமது அரசியல் அணுகுமுறை இருக்கும். அதற்கான பாட்டாளி மாடல் கொள்கையை வடிவமைத்து கொண்டிருக்கிறோம். எனவே நான் உறுதி தருகிறேன். ஏர் பூட்டிய காளை போல கடுமையாக உழைப்பேன். அதேவேளை தொண்டர்களுக்கு பிரச்சினை என்றால் ஜல்லிக்கட்டு காளை போல துள்ளி குதித்து வருவேன்.

மற்ற கட்சிகளை காட்டிலும் பா.ம.க.வுக்குத்தான் தமிழகத்தை ஆளும் தகுதியும், திறமையும் அதிகம் இருக்கிறது. ஆனால் மக்கள் அந்த வாய்ப்பை நமக்கு அளிக்கவில்லை. நிச்சயம் இனி அளிப்பார்கள். அது காலத்தின் கட்டாயம்.

பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து மது விலக்கு அறிவிப்பில்தான். அதேபோல காலநிலை மாற்றத்தின் அவசியத்தையும் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். இதில் நாம் எச்சரிக்கை காட்டாவிட்டால் பெரும் இயற்கை பேரழிவுகளுக்கு நாம் ஆளாக நேரிடும்.

எத்தனையோ சாதனைகளை நாம் செய்திருந்தாலும் சாதி கட்சி என்று நமக்கு முத்திரை குத்தி ஒரு சிறிய வட்டத்தில் நம்மை அடைக்க பார்க்கிறார்கள். அதையெல்லாம் உடைப்போம். நமது வளர்ச்சி பிடிக்காமல் சிலர் செய்யும் அரசியல் சூழ்ச்சி நடக்கவிட மாட்டோம். பா.ம.க. அதன் இலக்கை எட்ட நான் கடினமாக உழைப்பேன்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story