திருவாரூரில், விநாயகர் சிலைகள் வாங்க மக்கள் ஆர்வம்


திருவாரூரில், விநாயகர் சிலைகள் வாங்க மக்கள் ஆர்வம்
x
தினத்தந்தி 17 Sep 2023 7:00 PM GMT (Updated: 17 Sep 2023 7:00 PM GMT)

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திருவாரூரில் விநாயகர் சிலைகளை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

திருவாரூர்

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி திருவாரூரில் விநாயகர் சிலைகளை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

விநாயகர் சதுர்த்தி விழா

இந்துக்களின் முழு முதல் கடவுள் விநாயகர். ஆவணி மாத அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை சதுர்த்தி நாளன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெறும். வீடுகளில் மக்கள் களிமண்ணால் ஆன சிலைகளை வாங்கி வழிபடுவார்கள்.

களிமண்ணால் ஆன சிலைகள்

வழக்கம்போல் இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழாவை உற்சாகமாக கொண்டாட மக்கள் ஆயத்தமாக உள்ளனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருவாரூரில் களிமண், கிழங்கு மாவு உள்ளிட்டவற்றை கொண்டு சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

திருவாரூர் முழுவதும் நேற்று பல்வேறு இடங்களில் சிலை விற்பனை நடந்தது. ரூ.100 முதல் ரூ.300 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு சிலைகள் விற்பனையாகின. இந்த சிலைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

பூ- அருகம்புல்

பூக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. விநாயகர் பூஜைக்கு தேவையான அருகம்புல், அவல், பொரிக்கடலை உள்ளிட்டவற்றையும் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். இதன் காரணமாக கடைவீதியில் பூக்கடைகள், பழக்கடைகள், மளிகை கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. விநாயகருக்கு படைக்கப்படும் கொழுக்கட்டையை தயார் செய்வதற்கான மாவு விற்பனையும் படுஜோராக நடந்தது.


Next Story