திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் மழையால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு; நீர்மட்டம் உயர்வு


திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் மழையால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு; நீர்மட்டம் உயர்வு
x

திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் மழையால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

திருவள்ளூர்

நீர்வரத்து அதிகரிப்பு

சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி விளங்குகிறது. இதில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திர மாநிலம் நெல்லூர் உள்ள கண்டலேறு அணையிலிருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம். கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திரா அரசு வருடம் தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும். அதன்படி கடந்த மே 3-ந் தேதி முதல் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக பூண்டி ஏரி நீர் பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிக்கு நீர்வரத்து அதிகமாகியது.

நீர்மட்டம் உயர்வு

நேற்று மாலை 6 மணி நிலவரப்படி மழைநீர் வினாடிக்கு 320 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்தது. இதனுடன் சேர்த்து கிருஷ்ணா நதிநீர் வினாடிக்கு 140 கன அடியாக வந்து கொண்டிருந்தது.

பூண்டி ஏரியில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று மாலை நிலவரப்படி 1.837 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியிலிருந்து சென்னை குடிநீர் வாரியத்திற்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 40 கனஅடியாக தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் வந்து கொண்டிருப்பதால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் கிடு கிடு என உயர்ந்து வருகிறது. தண்ணீர் வரத்து இதே போன்று தொடர்ந்தால் ஏரியின் முழு கொள்ளளவு சில நாட்களில் எட்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story