வெவ்வேறு இடங்களில் சம்பவம்: பஸ் சக்கரத்தில் சிக்கி விமான நிலைய ஊழியர் உள்பட 3 பேர் சாவு


வெவ்வேறு இடங்களில் சம்பவம்: பஸ் சக்கரத்தில் சிக்கி விமான நிலைய ஊழியர் உள்பட 3 பேர் சாவு
x

மூன்று வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்துகளில் பஸ் சக்கரத்தில் சிக்கி விமான நிலைய ஊழியர் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

சென்னை

திருவண்ணாமலை மாவட்டம், செய்யூரை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 43). இவர் ஊரப்பாக்கதில் தனியாக வீடு எடுத்து தங்கி, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள தனியார் விமான நிறுவனத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார்.

நேற்று ஊரப்பாக்கத்தில் இருந்து வழக்கம்போல் மோட்டார்சைக்கிளில் விமான நிலையத்துக்கு வேலைக்கு சென்றார். தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் ஜி.எஸ்.டி. சாலை - காந்தி சாலை சந்திப்பு அருகே வந்தபோது இவரது மோட்டார்சைக்கிள் மீது ஆட்டோ மோதியது.

இதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த ஏழுமலை மீது அவருக்கு பின்னால் திருவண்ணாமலையில் இருந்து கோயம்பேடு நோக்கி வந்த அரசு விரைவு பஸ் ஏறி இறங்கியது. பஸ் சக்கரத்தில் சிக்கிய ஏழுமலை, அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை கொரட்டூர் பகுதியை சேர்ந்தவர் சாம் (24). தனியார் மருந்தக ஊழியரான இவர், நேற்று மதியம் வேலை விஷயமாக பூந்தமல்லி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

பூந்தமல்லி-பெங்களூரு நெடுஞ்சாலையில் பாரிவாக்கம் அருகே சென்றபோது சைதாப்பேட்டையில் இருந்து நேமம் நோக்கி சென்ற அரசு பஸ், இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சாம், பஸ் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான பஸ் டிரைவர் மோகன் (38) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தாம்பரம் அருகே உள்ள மணிமங்கலம் ஆலடி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார்(42). இவருக்கு திருமணமாகி மனைவி, மகன், மகள் உள்ளனர். இவர் ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று இரவு பணிக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் ஒரகடம் நோக்கி முடிச்சூர் சி.எஸ்.ஐ. தேவாலயம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் குறுக்கே வந்த மாடு மீது ேமாட்டார்சைக்கிள் மோதியதில் கீழே விழுந்தார். பின்னால் வந்த மாநகர பஸ் அவரது தலையில் ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே குமார் தலை நசுங்கி இறந்தார்.

இதை கண்டித்து அந்த பகுதியில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை பீர்க்கன்காரணை போலீசார், சமாதானம் செய்து வைத்தனர். விபத்து குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story