பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர்வரத்து அதிகரிப்பு


பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர்வரத்து அதிகரிப்பு
x

பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர்வரத்து அதிகரித்துள்ளது.

திருவள்ளூர்

கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரை ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும்.

பூண்டி ஏரியில் மதகு, கிணறுகள் அமைக்கும் பணிகள் மற்றும் சேதம் அடைந்த கிருஷ்ணா கால்வாய் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஜூலை மாதத்தில் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் பெறவில்லை.

பணிகள் முடிவடைந்ததால் நவம்பர் 28-ந்தேதி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 2 ஆயிரத்து 100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக பலத்த மழை பெய்ததால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1,400 கனஅடியாக குறைக்கப்பட்டது. ஆந்திர விவசாயிகள் கிருஷ்ணா கால்வாய் நீரை பயன்படுத்துவது வழக்கம். இதன் காரணமாக இத்தனை நாட்களாக பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 300 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

கடந்த 3 நாட்களாக ஆந்திராவில் பலத்த மழை பெய்து வருவதால் அங்குள்ள விவசாயிகள் கிருஷ்ணா நதி நீரை பயன்படுத்தவில்லை. அதனால் பூண்டிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை வினாடிக்கு 533 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 34.49 அடியாக பதிவானது. 2.979 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு மழைநீர் மற்றும் கிருஷ்ணா நீர்வரத்து வினாடிக்கு 1,235 கன அடியாக இருந்தது. பூண்டி ஏரியில் இருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு இணைப்பு கால்வாய் வழியாக வினாடிக்கு 650 கன அடி வீதமும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக வினாடிக்கு 38 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.


Next Story