'ஜார்க்கண்ட் அரசை கவிழ்க்கும் பா.ஜ.க.வின் முயற்சியை இந்தியா கூட்டணி தடுத்து நிறுத்தியது' - ராகுல் காந்தி
பா.ஜ.க.வின் சதியை 'இந்தியா' கூட்டணி முறியடித்தது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
ராஞ்சி,
ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ்-ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நிலக்கரி சுரங்க முறைகேடு, நில மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முதல்-மந்திரியாக இருந்த ஹேமந்த சோரன் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து புதிய முதல்-மந்திரியாக சம்பாய் சோரன் பதவியேற்றுள்ளார்.
இதனிடையே காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மணிப்பூர் முதல் மும்பை வரை 'இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை' மேற்கொண்டு வருகிறார். தற்போது அவரது யாத்திரை ஜார்க்கண்ட் மாநிலத்திற்குள் நுழைந்த நிலையில், அவரை அந்த மாநிலத்தின் புதிய முதல்-மந்திரி சம்பாய் சோரன் வரவேற்றார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ஜார்க்கண்ட் மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை பா.ஜ.க. சீர்குலைக்க முயன்றது என்றும், ஆனால் 'இந்தியா' கூட்டணி எதிர்த்து நின்று பா.ஜ.க.வின் சதியை முறியடித்தது என்றும் கூறினார். பணபலம் மற்றும் விசாரணை அமைப்புகளை பா.ஜ.க. தன்வசம் வைத்திருந்தாலும், அதைக் கண்டு காங்கிரஸ் கட்சி அஞ்சப்போவது இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.