அரூரில் மர்ம காய்ச்சலால் மாணவர் பலி:2 தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்களிடம் விசாரணை
அரூரில் மர்ம காய்ச்சலால் மாணவர் பலி விவகாரத்தில் 2 தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அரூர்:
அரூர் அருகே உள்ள சூரப்பட்டியை சேர்ந்தவர் கிரி (வயது 21). பாலிடெக்னிக் கல்லூரியில் முதல் ஆண்டு படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் உள்ள 2 தனியார் ஆஸ்பத்திரிகளில் அடுத்தடுத்து சிகிச்சை பெற்றார். பின்னர் அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தவறான மருத்துவ சிகிச்சையால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதாக கூறி அவருடைய உறவினர்கள் நேற்று முன்தினம் அரூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 11 பேர் மீது அரூர் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதேபோல் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையால் பாதிப்பு ஏற்பட்டதா? என்பது குறித்து 2 தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.