சுரங்கத்தொழிலாளர்கள் 41 பேரும் தீங்கில்லாமல் மீட்கப்பட்டது பெரிய ஆறுதலைத் தருகிறது - கமல்ஹாசன்


சுரங்கத்தொழிலாளர்கள் 41 பேரும் தீங்கில்லாமல் மீட்கப்பட்டது பெரிய ஆறுதலைத் தருகிறது - கமல்ஹாசன்
x

17 நாட்கள் நடந்த தீவிர மீட்பு பணி வெற்றிகரமாக நிறைவடைந்து, 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

சென்னை,

உத்தரகாண்ட் மாநிலம் சில்க்யாரா மலைப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும்போது சுரங்கத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. இதில், 41 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். 17 நாட்கள் நடந்த தீவிர மீட்பு பணி வெற்றிகரமாக நிறைவடைந்து, 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் நலமுடன் இருக்கிறார்கள். இதனால் அவர்களின் உறவினர்கள் மட்டுமின்றி நாடே மகிழ்ச்சியடைந்துள்ளது.

இந்த நிலையில், உயிர்களைக் காக்கும் முயற்சியில் ஈடுபட்ட அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த பாராட்டு என்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-

உத்தரகாசியில் சுரங்கத்தொழிலாளர்கள் நாற்பத்தொரு பேரும் தீங்கில்லாமல் மீட்கப்பட்டது பெரிய ஆறுதலைத் தருகிறது. கடுமையான சவால்கள், பின்னடைவுகள் ஏற்பட்டபோதும் சளைக்காமல் தீரத்துடன் போராடி உயிர்களைக் காத்த மீட்புக் குழுவினரும், அவர்களுக்கு உதவிய எலிவளை சுரங்கத்தொழிலாளர்களும் போற்றுதலுக்குரியவர்கள். சுரங்கத்தில் மாட்டிக்கொண்ட தொழிலாளர்களும் மனத்திடத்தோடு காத்திருந்தது பாராட்டத்தக்கது.

17 நாட்கள் தொடர்ந்த இந்தப் போராட்டத்தில் உயிர்களைக் காக்கும் முயற்சியில் ஈடுபட்ட அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த பாராட்டு. மீட்கப்பட்டவர்களின் குடும்பத்தினரோடு எனது மகிழ்வைப் பகிர்ந்துகொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.Next Story