ஜனவரி 20-ந்தேதி கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு


ஜனவரி 20-ந்தேதி கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு
x

ஜனவரி 20-ந்தேதி கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்த இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

சென்னை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கவர்னர் உரை என்பது மாநில அரசின் கொள்கை குறிப்பே தவிர கவர்னரின் தனிப்பட்ட கருத்துக்களின் தொகுப்பு அல்ல. அரசமைப்புச் சட்டத்தின்படி நியமிக்கப்பட்ட அரசின் தலைவர் என்கிற பொறுப்பின் காரணமாக கவர்னருக்கு அந்த மரியாதை வழங்கப்படுகிறது. ஆனால், அதற்கு மாறாக, தமிழ்நாடு கவர்னர் அமைச்சரவை தயாரித்து, ஒப்புதல் அளித்த அறிக்கையில் தானடித்த மூப்பாக சிலவற்றை தவிர்த்தும், திரித்தும் வாசித்திருப்பது அரசமைப்புச் சட்டப்படியும், தார்மீக நெறியின் படியும் ஏற்றுக் கொள்ள முடியாத நடவடிக்கையாகும்.

பெரியார், அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், டாக்டர் கலைஞர் உள்ளிட்ட தலைவர்களின் பெயரையும், சுயமரியாதை, பல்லுயிர் ஓம்புதல், திராவிட மாடல் உள்ளடக்கிய வளர்ச்சி, பெண்ணுரிமை போன்ற தமிழ்நாடு அரசின் கொள்கைகள் குறித்த வாசகங்களையும் வாசிக்காமல் தவிர்த்திருக்கிறார். தமிழ்நாடு மாநிலம், தமிழ்நாடு அரசு ஆகிய அரசமைப்புச் சட்டத்தின்படி ஒப்புக்கொள்ளப்பட்ட பெயர்களையும் உச்சரிக்க மறுத்திருக்கிறார். இவையனைத்தின் மூலம் கவர்னர் தனது கடமையிலிருந்தும், அரசமைப்புச் சட்ட வழிகாட்டுதலிலிருந்தும் மீறியிருக்கிறார். இதன் மூலம் கவர்னராக தொடர்வதற்கான தார்மீக உரிமையை அவர் இழந்திருக்கிறார்.

ஒரு அமைச்சரவை தயாரித்த அறிக்கையை மறைத்தும், திரித்தும் அவர் வாசித்துக் கொண்டிருந்த போது முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களும், ஆளும் கட்சி மற்றும் இதர கட்சியின் உறுப்பினர்களும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தனர். ஆனால், முதலமைச்சர் பேசிக் கொண்டிருந்த போது அவை நாகரீகமின்றி சட்டப்பேரவையையும், அதன் மூலம் தமிழக மக்களையும் அவமதிக்கும் வகையில் அவை மரபை மீறி கவர்னர் வெளியேறிச் சென்றது அவரது சகிப்பின்மையையும், நாகரீகமற்ற தன்மையையும் வெளிப்படுத்தியிருக்கிறது. இதேபோன்று தேசிய கீதத்தை அவமதிக்கும் வகையிலும் நடந்து கொண்டுள்ளார்.

இதுகாறும் அவைக்கு வெளியே வாய்ப்பு கிடைக்கிற போதெல்லாம் தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும், தமிழக பாரம்பரியத்தையும் கேள்விக்குள்ளாக்கி கொண்டிருந்த கவர்னர் சட்டப்பேரவைக்குள்ளேயே அவற்றை அரங்கேற்றியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அதேசமயம், தமிழகத்தின் மாண்பையும், சட்டமன்றத்தின் மாண்பையும் நிலைநிறுத்தும் வகையில் அமைச்சரவை தயாரித்த முழுஉரையும் அவைக்குறிப்பில் ஏற்றப்படும் என்றும், கவர்னர் திரித்துக் கூறியவை நீக்கப்படும் என்றும் உடனடியாக முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டது கவர்னருக்கு அளிக்கப்பட்ட தகுந்த பதிலடியாகவும், பாராட்டுக்குரியதாகவும் அமைந்துள்ளது.

அரசமைப்புச் சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடந்து கொள்ள வேண்டிய கவர்னர் ஆர்.எஸ்.எஸ்.சின் தொண்டராக செயல்படுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சீர்குலைக்கும் நோக்கத்தோடு நடந்து கொண்டுள்ளார். தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்தும் வகையிலும், தமிழ்நாடு அரசுடன் மோதல் போக்கை கடைபிடிப்பதே தனது கொள்கையாகவும் கொண்டுள்ள கவர்னர் ஆர்.என். ரவி உடனடியாக தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்துகிறது.

அநாகரீகமாகவும், சட்டத்திற்கு புறம்பாகவும், சட்டப்பேரவையை அவமதிக்கும் வகையிலும் நடந்து கொண்ட கவர்னர் ஆர்.என். ரவியை வன்மையாக கண்டிப்பதோடு, அவர் தமிழ்நாட்டிலிருந்து வெளியேற வேண்டுமெனவும், ஒன்றிய அரசு அவரை நீக்கம் செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தி 20.1.2023 அன்று கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவது என சிபிஐ (எம்) மாநில செயற்குழு முடிவு செய்துள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story