ரஜினி மகள் வீட்டில் நகை திருட்டு சம்பவம் - கைதானவர்களுக்கு ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவு
பணிப்பெண் ஈஸ்வரி மற்றும் கார் டிரைவர் வெங்கடேசன் ஆகிய இருவருக்கும் ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா, போயஸ்கார்டனில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் லாக்கர் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 60 பவுன் தங்க, வைர, நவரத்தின கற்கள் பதித்த பாரம்பரியமான நகைகளை காணாமல் போனதாக சென்னை தேனாம்பேட்டை போலீசில் ஐஸ்வர்யா புகார் கொடுத்தார்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், ஐஸ்வர்யா வீட்டில் வேலை பார்த்த வேலைக்கார பெண் ஈஸ்வரி, கார் டிரைவர் வெங்கடேசன் ஆகிய இருவரை அதிரடியாக கைது செய்தனர். மேலும் கைதானவர்களிடம் இருந்து சுமார் 160 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.
புகார் அளிக்கப்பட்டதை விட அதிகமான நகை பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் மொத்தமாக காணாமல் போன நகை எவ்வளவு என்பது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், மொத்தம் 200 பவுன் நகை காணாமல் போனதாக வழக்கை பதிவு செய்தனர்.
இதனிடையே ஈஸ்வரி மற்றும் வெங்கடேசன் தரப்பில் ஜாமீன் கோரி சைதாப்பேட்டை கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, பணிப்பெண் ஈஸ்வரி மற்றும் கார் டிரைவர் வெங்கடேசன் ஆகிய இருவருக்கும் ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே 160 பவுன் நகை கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், புகாரில் 200 பவுன் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் மீதம் உள்ள நகையை கண்டறியும் முயற்சியில் தேனாம்பேட்டை போலீசார் ஈடுபட்டுள்ளனர்.