திருவள்ளூரில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட நிகழ்ச்சி - அமைச்சர் காந்தி தலைமை தாங்கினார்


திருவள்ளூரில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட நிகழ்ச்சி - அமைச்சர் காந்தி தலைமை தாங்கினார்
x

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட நிகழ்ச்சிக்கு அமைச்சர் ஆர்.காந்தி தலைமை தாங்கி கலைஞர் மகளிர் உரிமை கையேடுகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

திருவள்ளூர்

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செப்டம்பர் 15-ம் தேதி முதல் தொடங்கப்படும் என அரசு அறிவித்து இருந்தது.

அதன்படி தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி நேற்று காஞ்சீபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

இதைதொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயனாளிகளான 2,170 மகளிர்க்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கிடும் வகையிலான வங்கி ஏ.டி.எம்.கார்டுகள் மற்றும் கலைஞர் மகளிர் உரிமை கையேடுகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தலைமை தாங்கிய கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, பயனாளிகளுக்கு வங்கி ஏ.டி.எம். கார்டுகள் மற்றும் கலைஞர் மகளிர் உரிமை கையேடுகளை பயனாளிகளுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கலந்து ெகாண்ட பயனாளிகள் இந்த தொகை எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என தெரிவித்தனர்.

இதில் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன், எம்.எல்.ஏ.க்கள் சா.மு.நாசர், வி.ஜி.ராஜேந்திரன், ஆ.கிருஷ்ணசாமி, எஸ்.சந்திரன், கேகோவிந்தராஜன், கணபதி, துரை சந்திரசேகர் மற்றும் அரசு அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story