காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் - லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்


காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் - லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
x

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி மாத பிரம்மோற்சவம் கடந்த 13-ந் தேதி தொடங்கியது. அன்று முதல் காலை, மாலை இருவேளகைளிலும் சாமி மலர் அலங்காரத்தில் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கருடசேவை திருவிழா கடந்த 15-ந் தேதி நடைபெற்றது.

7-ம் நாளான நேற்று விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலர் அலங்காரத்தில் அதிகாலை கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க புறப்பட்டார்.

காஞ்சீபுரம் காந்திரோடு தேரடியில் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்த மரத்தேரில் எழுந்தருளினார். அர்ச்சகர்கள் வேதமந்திரங்கள் ஓத கற்பூர தீபாராதனைகள் காண்பித்தனர். பின்னர் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

இதில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை காஞ்சீபுரம் மண்டல இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரி வான்மதி, கோவில் செயல் அலுவலர் என்.தியாகராஜன், கோவில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர். வரதராஜபெருமாள் கோவில் தேரோட்டத்தால் காஞ்சீபுரம் நகரம் மக்கள் வெள்ளத்தில் மூழ்கியது.


Next Story