கர்நாடகாவுக்கு, தமிழகத்தில் இருந்து மின்சாரம் வழங்க கூடாது


கர்நாடகாவுக்கு, தமிழகத்தில் இருந்து மின்சாரம் வழங்க கூடாது
x

காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடகாவுக்கு, தமிழகத்தில் இருந்து மின்சாரம் வழங்க கூடாது என காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி:

ஆர்ப்பாட்டம்

தமிழகத்தின் வாழ்வாதாரமான காவிரியில் தண்ணீரை திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசே வலியுறுத்தாத மத்திய அரசை கண்டித்து திருக்காட்டுப்பள்ளி பஸ் நிலையத்தின் எதிரில் காவிரி உரிமை மீட்புக்குழுவின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார்.

இதில் காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன், வீரத்தமிழர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் துரை செந்தில்நாதன், தமிழ் தேசிய பேரியக்க பூதலூர் ஒன்றிய செயலாளர் தென்னவன், தமிழ் தேசிய பேரியக்க பொதுக்குழு உறுப்பினர் கருணாநிதி, நாம் தமிழர் கட்சியின் தொகுதி செயலாளர் அற்புதராசு, திருச்சினம்பூண்டி ஊராட்சி மன்ற தலைவர் வடிவழகன், ஒன்பத்துவேலி மாரியய்யா உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் போது மழை பெய்தது. கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பேட்டி

பின்னர் காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை ஆணையம் குறித்த அரசிதழ் அறிவிப்பில் பற்றாக்குறை காலங்களில் செயல்படுத்த வேண்டிய முறைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை செயல்படுத்த வேண்டிய காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தர் நடுநிலை தவறி ஒருதலைப் பட்சமாக செயல்பட்டு வருகிறார். அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

பொருளாதார தடை

தமிழ்நாட்டுக்கு சட்டப்படி உரிமை உள்ள காவிரி நீரை தடுத்து வைத்துள்ள கர்நாடகத்துக்கு எதிராக தமிழ்நாடு அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும். நெய்வேலி, கூடங்குளத்தில் இருந்து கர்நாடகாவுக்கு மின்சாரம் வழங்கக்கூடாது. தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ள வேளாண் தொழிலாளர் குடும்பத்திற்கு மாதம் ரூ10 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். சம்பா, தாளடி சாகுபடி செய்வது குறித்து முறையான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும். குறுவை இழப்பீடு என்று அறிவித்துள்ள தொகை போதாது, ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story