கார்த்திகை தீபத்திருவிழா: திருவண்ணாமலையில் குவியும் பக்தர்கள்..!


கார்த்திகை தீபத்திருவிழா: திருவண்ணாமலையில் குவியும் பக்தர்கள்..!
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 26 Nov 2023 2:04 AM GMT (Updated: 26 Nov 2023 3:30 AM GMT)

கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று அதிகாலை 3.40 மணிக்கு கோவில் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இவ்விழாவை காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

அதன்படி, இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கார்த்திகை தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று அதிகாலை 3.40 மணிக்கு கோவில் கருவறை முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது. பரணி தீப தரிசனத்தைக் காண நள்ளிரவு முதலே திரளான பக்தர்கள் காத்திருந்து, தரிசனம் செய்தனர்.

இன்று மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் தீப தரிசனம் மண்டபம் எழுந்தருள அர்த்தநாரீஸ்வரர் காட்சியும், கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இரவு பஞ்சமூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் மாடவீதி உலாவும் நடைபெற உள்ளது. இந்த நிலையில் கார்த்திகைத் தீபத்திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர்.

கார்த்திகை தீப தரிசனம் காண சுமார் 50 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் பக்தர்களின் வசதிக்காக பல சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


Next Story