கருணாநிதியின் வரலாற்றை கவிதையாக தர வேண்டும் - வைரமுத்துவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்


கருணாநிதியின் வரலாற்றை கவிதையாக தர வேண்டும் - வைரமுத்துவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
x
தினத்தந்தி 1 Jan 2024 2:44 PM GMT (Updated: 1 Jan 2024 3:02 PM GMT)

படைப்பு புத்தகத்தை தரமாக தயாரிப்பதில் வைரமுத்து கண்ணும் கருத்துமாக இருப்பார் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னையில் கவிஞர் வைரமுத்து எழுதிய 'மகா கவிதை' நூலின் வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது. இந்த நூலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

கருணாநிதியின் வரலாற்றை வைரமுத்து கவிதையாக தர வேண்டும். ஒரு ரசிகனாக இது என்னுடைய வேண்டுகோள்; இன்னும் சொல்லப்போனால் கட்டளை. வைரமுத்து கவிதை எழுதிகொண்டே இருக்க வேண்டும். அதை நான் பெற்று கொண்டே இருக்க வேண்டும்.

கவிஞர் வைரமுத்து எழுதியுள்ள இந்த நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வேண்டும். வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கனமழை பெய்யும் என்று கூறினார்கள். எவ்வளவு கனமழை பெய்யும் என்பதை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. அதிக மழைக்கான உண்மையான காரணங்களை வைரமுத்து தனது நூலில் கூறியுள்ளார்.

மண்ணியல், விண்ணியல் மாற்றத்தை பொருட்படுத்தாவிடில் ஐம்பூதங்களும் எதிராய் மாறிவிடும் என்கிறார் கவிஞர். மண், நீர், காற்று, வானம் மாசு அடைந்துள்ளதால் சுற்றுச்சூழல் மாறியுள்ளது. கவிஞர் வைரமுத்துவின் மொழி ஆளுமை இந்த நூலில் வெளிப்படுகிறது. படைப்பு, புத்தகத்தை தரமாக தயாரிப்பதில் வைரமுத்து கண்ணும் கருத்துமாக இருப்பார். முக்கியமான காலக்கட்டத்தில் 'மகா கவிதை' நூலை வைரமுத்து எழுதியுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story