ஓடும் ரெயிலில் இருந்து குதித்து கேரள கைதி தப்பி ஓட்டம்


ஓடும் ரெயிலில் இருந்து குதித்து கேரள கைதி தப்பி ஓட்டம்
x

திருட்டு வழக்கு தொடர்பாக அனீஸ் பாபுவை பாலக்காடு போலீசார் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்தனர்.

கோவை:

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் அனீஸ்பாபு (வயது 41). இவர் மீது கேரள மாநிலத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் திருட்டு வழக்கு தொடர்பாக அனீஸ் பாபுவை பாலக்காடு போலீசார் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்தனர். பின்னர் அவரை அங்குள்ள சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார் பேட்டையில் அனீஸ்பாபு மீது திருட்டு வழக்கு உள்ளது. அந்த வழக்கு விசார ணைக்காக அனீஸ்பாபுவை திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்த கேரள மாநில போலீசார் அழைத்து சென்றனர்.

அங்கு கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு மீண்டும் சிறையில் அடைப்பதற்காக அனீஸ் பாபுவை ரெயில் மூலம் கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு 3 போலீசார் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.

அவர்கள் வந்த ரெயில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு கோவை ரெயில் நிலையத்தில் 1-வது பிளாட்பாரத்தில் நிற்பதற் காக மெதுவாக வந்து கொண்டிருந்தது. அந்த ரெயில் மெதுவாக சென்று கொண்டு இருக்கும் போதே அனீஸ்பாபு கண் இமைக்கும் நேரத்தில் போலீசாரின் கைகளை தட்டி விட்டு ரெயிலில் இருந்து திடீரென்று குதித்து தப்பி ஓடினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கேரள போலீசார் அவரை துரத்திச் சென்று பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் அனீஸ் பாபு தப்பி சென்று விட்டார். கேரள போலீசார் ரெயில் நிலையம் முழுவதும் தேடியும் அவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை.


Next Story