என்ஜினீயரை கடத்தி சென்று நகை, பணம் பறிப்பு


என்ஜினீயரை கடத்தி சென்று நகை, பணம் பறிப்பு
x
தினத்தந்தி 6 Dec 2022 12:15 AM IST (Updated: 6 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் லாட்ஜில் அறை எடுத்து தங்கியதால் ஏற்பட்ட தகராறில் என்ஜினீயரை கடத்தி சென்று நகை, பணம் பறித்த குத்தகைதாரர்கள் உள்பட 9 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கோயம்புத்தூர்

கணபதி

கோவையில் லாட்ஜில் அறை எடுத்து தங்கியதால் ஏற்பட்ட தகராறில் என்ஜினீயரை கடத்தி சென்று நகை, பணம் பறித்த குத்தகைதாரர்கள் உள்பட 9 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

என்ஜினீயர்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியை சேர்ந்தவர் தாஜூதீன்(வயது 33). சிவில் என்ஜினீயரான இவர், கோவை நஞ்சேகவுண்டன்புதூர் பகுதியில் கட்டுமானத்துறை அலுவலகம் நடத்தி வருகிறார். இதற்காக கணபதியில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து 9 மாதமாக தங்கி இருந்தார்.

இந்த நிலையில் தாஜூதீன் தங்கி இருப்பது, அந்த லாட்ஜை குத்தகைக்கு எடுத்து உள்ள மெர்வின் (28), பரத் (32) ஆகியோருக்கு பிடிக்கவில்லை. மேலும் அறையை காலி செய்ய சொன்னதால், இரு தரப்பினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

தீ வைத்தனர்

இதையடுத்து கடந்த 30-ந் தேதி லாட்ஜின் வரவேற்பு அறையில் தாஜூதீன் அமர்ந்து இருந்தார். அப்போது அங்கு மெர்வின், பரத் உள்பட 9 பேர் வந்தனர். பின்னர் அவர்கள் தாஜூதீனிடம் அறையை காலி செய்ய கூறினார்கள். ஆனால் அவர் காலி செய்ய மறுத்தார்.

இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 9 பேரும், தாஜூதீனை அவர் தங்கி இருந்த அறைக்கு இழுத்துச்சென்று சரமாரியாக தாக்கினார்கள். அத்துடன் அந்த அறையில் இருந்த ஸ்பிரேயை எடுத்து அவர் மீது அடித்ததுடன், தீயும் வைத்தனர். இதில் அவருக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது.

நகை, பணம் பறிப்பு

பின்னர் அவரை சிங்காநல்லூரில் உள்ள மற்றொரு லாட்ஜிக்கு காரில் கடத்தி சென்றனர். தொடர்ந்து அங்குள்ள ஒரு அறையில் வைத்து அவரை அடித்து உதைத்ததுடன் ரூ.5 லட்சம், 3 பவுன் செயின் மற்றும் கைச்செயின் ஆகியவற்றை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

இதில் காயம் அடைந்த தாஜூதீன், தனது சொந்த ஊருக்கு சென்று அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் கோவை வந்த அவர், இது குறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் மெர்வின், பரத் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story