கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் ஜூன் மாதம் திறக்கப்படும் - அமைச்சர் சேகர்பாபு


கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் ஜூன் மாதம் திறக்கப்படும் - அமைச்சர் சேகர்பாபு
x

கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் ஜூன் மாதம் திறக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு பேட்டி அளித்தார்.

செங்கல்பட்டு

கிளாம்பாக்கம் பஸ் நிலையம்

சென்னை கோயம்பேடு அதன் சுற்றுப்புற பகுதி மற்றும் சென்னை-திருச்சி, தேசிய நெடுஞ்சாலைகளில் இருபுறமும் நிலவும் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைக்கும் பொருட்டு தென் மாவட்டங்கள் நோக்கி செல்லும் பொதுமக்கள் தங்களது பயணங்களை சிரமமின்றி இனிதாக மேற்கொள்வதற்காக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22-ந்தேதி காணொலி காட்சி மூலம் கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கரில் 59.86 ஏக்கர் பரப்பளவில் ரூ.393 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் புறநகர் பஸ் நிலையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார்.

அதனை தொடர்ந்து சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் மூலம் கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் கட்டும் பணி தொடங்கி இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

அமைச்சர் ஆய்வு

கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் வருகிற ஜூன் மாதம் திறக்கப்படும் என்று ஏற்கனவே சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையத்தில் நடைபெற்று வரும் இறுதி கட்ட பணிகளை நேற்று சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது அதிகாரிகளிடம் அடுத்த முறை ஆய்வுக்கு வரும்போது தற்போது நடைபெற்று வரும் சின்ன சின்ன இறுதிகட்ட பணிகள் அனைத்தும் முடிந்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

ஜூன் மாதம் திறப்பு

இதனை தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

கிளாம்பாக்கத்தில் 59.86 ஏக்கர் பரப்பளவில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் புதிய பஸ் முனையம் கலைஞர் நூற்றாண்டு பஸ் முனையம் எனும் பெயரில் மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட உள்ளது. கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையத்தின் இறுதிகட்ட பணிகள் முடிந்து ஜூன் மாதம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்க தயாராக உள்ளது. இந்த முனையத்தில் புறநகர் பஸ்களுக்காக 28.25 ஏக்கர் பரப்பளவில் 226 புறநகர் பஸ்கள் (அரசு பஸ்கள்-164, ஆம்னி பஸ்கள்- 62) நிறுத்துவதற்காக 8 நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பஸ்நிலையத்தில் புறநகர் பஸ்களுக்காக தனி பணிமனை உள்ளது.

பஸ் முனையத்தில் மாநகர பஸ்களுக்காக 7.40 ஏக்கர் பரப்பளவில் 11 நடை மேடைகளுடன் 60 மாநகர பஸ்கள் வந்து செல்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தனி அலுவலக கட்டிடம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, 2 மின் தூக்கிகள், 2 நகரும் படிக்கட்டுகள் கழிவறைகள், மாநகர பஸ்களுக்காக தனி பணிமனை போன்ற வசதிகள் உள்ளது. இந்த முனையத்தில் 2 அடித்தளம், தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் நவீன வசதிகளுடன் கூடிய பிரதான கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. அடித்தளத்தில் 2,769 இருசக்கர வாகனங்கள், 324 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த இட வசதி செய்யப்பட்டுள்ளது.

95 சதவீதம் பணிகள் நிறைவு

பஸ்கள் எரிபொருள் நிரப்புவதற்கு 2 எரிபொருள் நிரப்பும் நிலையம் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மழைநீர் கால்வாய், மழைநீர் சேகரிப்பு தொட்டி, கழிவு நீரேற்று நிலையம், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், துணைமின் நிலையம், டீசல் ஜெனரேட்டர் போன்ற வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இரவு நேர பயன்பாட்டுக்காக அனைத்து சாலைகளிலும் தெருவிளக்குகள் மற்றும் உயர் கோபுர மின் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளது. புல் தரையுடன் கூடிய பசுமை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. பஸ் முனையம் 95 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

புதிய ரெயில் நிலையம்

கிளாம்பாக்கத்தில் புதிய ரெயில் நிலையம் அமைப்பதற்காக தென்னக ரெயில்வேயிடமிருந்து முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளது. பஸ் நிலையம் திறந்த பிறகு மக்களுக்கு என்னென்ன தேவை இருக்கிறது என்பதை கலந்து ஆலோசித்து மற்ற துறைகளோடு ஒருங்கிணைந்து அந்த துறைகளிடம் அனுமதி பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பேனா நினைவு சின்னம் வைப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருப்பது மட்டற்ற மகிழ்ச்சி, திராவிட முன்னேற்ற கழகத்திற்கு மாத்திரமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்திற்கு மகிழ்ச்சி.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர், உதயா கருணாகரன், ஒன்றிய குழு துணைத்தலைவர் வி.எஸ்.ஆராமுதன், தலைமை திட்ட அமைப்பாளர் ருத்ரமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் மகேஷ்குமார் மற்றும் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

1 More update

Next Story