கொத்தனாருக்கு கத்திக்குத்து
தியாகதுருகம் அருகே கொத்தனாரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தியாகதுருகம்,
தியாகதுருகம் அருகே பானையங்கால் கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி மகன் ஆகாஷ் (வயது 21), கொத்தனார். அதே பகுதியை சேர்ந்தவர் முத்துராமன் மகன் சந்துரு. இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆவர். சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் அதே பகுதியில் உள்ள சீரான்தோப்பில் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்தனர். அப்போது சந்துரு ஆகாசிடம் உனது கழுத்தில் கிடக்கும் தங்க சங்கிலியை அடகு வைத்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு மதுவாங்கி குடிக்கலாம் என கேட்டதாக தெரிகிறது. அதற்கு ஆகாஷ் மறுத்துள்ளார். இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சந்துரு கத்தியால் ஆகாசின் கழுத்தில் குத்தினார். இதில் பலத்த காயமடைந்த ஆகாஷ் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்துருவை தேடி வருகின்றனர்.