கொடை வள்ளல் இறுதி ஊர்வலம்: வானில் வட்டமிட்ட கருடன் - புல்லரிக்க வைக்கும் காட்சி...!


கொடை வள்ளல்  இறுதி ஊர்வலம்: வானில் வட்டமிட்ட கருடன் - புல்லரிக்க வைக்கும் காட்சி...!
x
தினத்தந்தி 29 Dec 2023 11:54 AM GMT (Updated: 29 Dec 2023 11:58 AM GMT)

9வது வள்ளலான புரட்சிக் கலைஞர், கருப்பு எம்ஜிஆர் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் மக்கள் கலந்து கொண்டு பிரியா விடை கொடுத்து வருகின்றனர்.

சென்னை,

தே.மு.தி.க. தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் சென்னையில் நேற்று காலமானார். அவரது உடல் மருத்துவமனையில் இருந்து சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு விஜயகாந்தின் உடலுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

நேரம் செல்லச் செல்ல விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த வருவோரின் எண்ணிக்கை அதிகமானதால் கோயம்பேட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கட்சி அலுவலக வளாகத்திலும் நெரிசல் அதிகமானது. எனவே, விஜயகாந்தின் உடல் இன்று காலை தீவுத்திடலுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

தீவுத்திடலில் விஜயகாந்த் உடலுக்கு பல்வேறு தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி நிகழ்ச்சிக்கு பிறகு பிற்பகல் விஜயகாந்த் உடல் ஊர்வலமாக தீவுத் திடலில் இருந்து கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்தின் கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்ய கொண்டு செல்லப்படுகிறது.

வழிநெடுக மக்கள் வெள்ளம் பெருங்கடலாக திரண்டு நின்று 9வது வள்ளலான புரட்சிக் கலைஞர், கருப்பு எம்ஜிஆர் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு பிரியா விடை கொடுத்து வருகின்றனர். கையெடுத்துக் கும்பிட்டு விஜயகாந்த் உடலுக்கு கண்ணீர் மல்க பொதுமக்கள், வயதானவர்கள், பிஞ்சு குழந்தைகள் என அனைவரும் அஞ்சலி செலுத்தி வருவதை பார்த்த விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் இரு கைகளையும் மக்களை பார்த்து கூப்பி அப்பாவின் பிரிவால் அழுது கொண்டே ஊர்வலமாக செல்லும் காட்சிகள் ரசிகர்களை நெகிழச் செய்துள்ளன. அமரர் ஊர்தி வாகனத்தில் விஜயகாந்தின் மனைவியும் தேமுதிக தலைவருமான பிரேமலதா, விஜயகாந்தின் மகன்களான விஜய பிரபாகரன் மற்றும் சண்முகப் பாண்டியன் உள்ளிட்டோர் கண்கலங்கியபடியே செல்கின்றனர்.

இந்தநிலையில், விஜயகாந்தின் உடல் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே கடக்கும் போதும் வானில் கருடன் வட்டமிட்டது. கொடை வள்ளல் என அழைக்கப்படும் விஜயகாந்தின் உடலுக்கு 3 முறை கருடன் வட்டமிட்ட காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.


Next Story