'கோடநாடு வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும்' எடப்பாடி பழனிசாமி பேட்டி


கோடநாடு வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் எடப்பாடி பழனிசாமி பேட்டி
x

கோடநாடு வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் சென்னை வருவதற்காக மதுரை விமான நிலையம் சென்றார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோடநாடு கொலை வழக்கு குறித்து, சட்டமன்றத்தில் நான் கேள்வி எழுப்பினேன். அப்போது முதல்-அமைச்சர் அமைதியாக இருந்தார். வாயை மூடிக்கொண்டு இருந்தார். அ.தி.மு.க. ஆட்சியின்போது நடைபெற்றதை மட்டும் குறிப்பிட்டு பேசுகிறார்கள். வேண்டுமென்றே அவதூறு பரப்புகிறார்கள்.

ஏற்கனவே அவதூறு பரப்பிய ஒருவர் மீது நான் வழக்கு தொடர்ந்து அந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது.

கோடநாடு கொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டார்கள். இது சம்பந்தமான வழக்கு நடைபெற்றதும் அ.தி.மு.க. ஆட்சியின் போதுதான். ஆனால், குற்றவாளிகளுக்காக வாதாட தி.மு.க. வக்கீல்கள் தயாராக இருந்தார்கள். குற்றவாளிகளுக்கு ஜாமீன்தாரர்களாக இருந்தது தி.மு.க.வினர். இதனால்தான் சந்தேகம் ஏற்படுகிறது. எனவே கோடநாடு வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டும்.

இந்த வழக்கில் ஜாமீன்தாரர்களுக்கும், கொலை குற்றவாளிகளுக்கும் என்ன சம்பந்தம்? இந்த குற்றவாளிகள் கேரளாவை சேர்ந்தவர்கள். கேரளாவில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட கடும் குற்றங்களை செய்திருக்கிறார்கள். அந்த வழக்குகள் கேரள கோர்ட்டுகளில் நடந்து வருகிறது. இவர்களுக்கு ஏன் தி.மு.க.வினர் ஜாமீன் வாங்க வேண்டும். கொரோனாவால்தான் இந்த வழக்கு காலதாமதம் ஆனது. அப்போதே வழக்கு 90 சதவீதம் முடிந்ததாக தகவல்.

தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்னர் ஐ.ஜி. தலைமையில் விசாரணை நடைபெற்று கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 10 சதவீதம் மீதம் உள்ள அந்த வழக்கை முடிப்பதற்கு எவ்வளவு காலமாகும்? வேறு வழி இல்லாமலும், எங்கள் மீது எந்த குற்றமும் சுமத்த முடியாததால் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக இந்த விவகாரத்தை அடிக்கடி வெளியிடுகிறார்கள். நாங்கள் பதறவில்லை. ஜாமீன்தாரர்களை விசாரித்தால் அந்த வழக்கில் உண்மையான தகவல் வெளியே வரும்.

காவிரி விவகாரத்தில், அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் உச்ச நீதிமன்றத்தில் முழுமையான தீர்ப்பை நாங்கள் பெற்றோம். மாதம்தோறும் ஒரு குறிப்பிட்ட டி.எம்.சி தண்ணீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவைப் பெற்றது அ.தி.மு.க. அரசு.

இந்தியா என்கிற கூட்டணியின் நோக்கம் என்ன? மு.க.ஸ்டாலினால் தமிழகத்தை காப்பாற்ற முடியவில்லை, இவர் போய் இந்தியாவை காப்பாற்றுவேன் என்கிறார். காவிரி விவகாரத்தில், போராடி பெற்ற தீர்ப்பை செயல்படுத்த முதல்-அமைச்சர் தயங்குகிறார்.

முதல்-அமைச்சர் நானும் டெல்டா மாவட்டத்துக்காரன் என்று கூறினார். வீர வசனம் கேட்பதற்கு நன்றாக இருந்தது. ஆனால் நெற்பயிர் கருகியதற்கு என்ன தீர்வு கண்டீர்கள்?

பா.ஜனதா என்ன தீண்ட தகாத கட்சியா? 1999-ல் பா.ஜனதாவுடன் தி.மு.க. கூட்டணியில் இருந்து வெற்றி பெற்றார்கள். சுயநினைவு இல்லாத போதும் முரசொலி மாறன், மத்தியில் இலாகா இல்லாத மந்திரியாக இருந்தார். அப்போது பா.ஜனதா இனித்தது, இப்போது கசக்கிறதா?

என் மீது கூட ரூ.4800 கோடி ஊழல் வழக்கு வந்தது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி தீர்ப்பை பெற்றேன். எனக்கு மடியில் கனமில்லை. வழியிலும் பயமில்லை. தி.மு.க.வைப் போல நெஞ்சுவலி என்று நான் போய் படுக்கவில்லை.

சட்டமன்ற தேர்தலின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறினார்கள். நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் உள்ளது என்றார்கள்.

ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு பேச்சு; வந்த பிறகு ஒரு பேச்சு. 2010-ல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போதுதான் நீட் அரக்கன் கொண்டுவரப்பட்டான்.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, 27 மாதம் ஆகிவிட்டது. மக்களிடம் எதிர்ப்பு வந்த காரணத்தால் வழங்குவோம் என்று கூறுகிறார்கள்.

மின் கட்டணம், பத்திரப்பதிவு கட்டணத்தை உயர்த்தி உள்ளார்கள். விலைவாசி 40 சதவீதம் உயர்ந்திருக்கிறது. ஆனால், இதை எல்லாம் மூடி மறைக்க ஏராளமான கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டு மக்களை ஏமாற்ற பார்க்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தகுந்த பாடத்தை அவர்களுக்கு புகட்டுவார்கள்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

1 More update

Next Story