ரூ.20 கோடியில் கோயம்பேடு மார்க்கெட்டை மேம்படுத்த திட்டம் - அமைச்சர் சேகர்பாபு


ரூ.20 கோடியில் கோயம்பேடு மார்க்கெட்டை மேம்படுத்த திட்டம் - அமைச்சர் சேகர்பாபு
x

ரூ.20 கோடி செலவில் கோயம்பேடு மார்க்கெட் மேம்படுத்தப்படும் என்றும், வாகனங்கள் எளிதில் சென்று வர திட்டம் வகுக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சென்னை

அமைச்சர் ஆய்வு

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் அதிகாரிகளிடம் கோயம்பேடு மார்க்கெட்டில், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்திட உத்தரவிட்டார்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் மூலம் 21 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் ஆய்வு மேற்கொண்டோம். மலர் வணிக பகுதியிலும், ஏற்கனவே திறக்கப்பட்டு இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் இருக்கின்ற பணியாளர்கள் தங்கும் விடுதி, உணவு தானிய வணிகப் பகுதி, ஒதுக்கீடு செய்யப்பட்ட கடைகளில் வியாபாரத்துக்கு உட்படுத்தாமல் இருக்கின்ற கடைகளின் நிலை குறித்தும் கள ஆய்வு செய்துள்ளோம்.

ரூ.20 கோடியில்...

பணியாளர்கள் பகல் நேரங்களில் பணி முடித்து இரவு நேரங்களில் ஓய்வுக்கு செல்பவர்களுக்கும், இரவு பணியை முடித்து பகலில் ஓய்வு எடுப்பதற்கும் தேவையான அளவுக்கு தங்கும் வசதியை மேம்படுத்தி தருவதை முதற் குறிக்கோளாக எடுத்துக் கொண்டிருக்கின்றோம்.

அதேபோல் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கும், மார்க்கெட்டுக்கு வரும் வாகனங்களை முறைப்படுத்தி பராமரிக்கவும் ஏற்பாடுகளை செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறோம்.

கோயம்பேடு வணிக வளாகத்தை தரம் உயர்த்த ஒதுக்கப்பட்ட ரூ.20 கோடி நிதியை பயன்படுத்தி பல்வேறு பணிகள் செய்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பிப்ரவரி மாதம் வரை 4 கட்டங்களாக தொடர்ந்து கோயம்பேடு பகுதியில் ஆய்வு செய்ய உள்ளோம். ஆய்வை முடித்து பிறகு செய்ய வேண்டிய பணிகள் தொடர்பான அறிக்கை தயார் செய்யப்படும்.

தனி போலீஸ் நிலையம்

கோயம்பேடு மார்க்கெட் வளாகத்துக்குள் தனியாக ஒரு போலீஸ் நிலையத்தை அமைக்க முதல்-அமைச்சர் நடத்திய ஆய்வுக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை விரைவில் அமைத்து இடைத்தரகர்கள் போன்ற எவ்வித பிரச்சினைகளும் இன்றி செயல்படும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த ஆண்டுக்கான பொங்கல் சிறப்பு சந்தை வணிக வாகனம் நிறுத்துமிடத்தில் 3.5 ஏக்கர் பரப்பில் சென்னை பெருநகர வளர்ச்சி குழும அங்காடி நிர்வாகத்தால் அமைக்கப்பட உள்ளது.

மார்க்கெட்டை சுற்றியுள்ள சாலையோர வியாபாரிகளை ஒழுங்குபடுத்தும் பணிகளையும் மேற்கொள்வோம். திருமழிசையில் பணிகள் முடிவுறுகின்ற நிலையில் இருக்கின்றது. மார்க்கெட்டை மாற்றுவது தொடர்பாக முதல்-அமைச்சர் அறிவுரையைப் பெற்று முடிவெடுக்கப்படும். அதேபோல இந்த மார்க்கெட் அலுவலர்கள் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையே ஒரு நட்புணர்வு பாலமாக இருக்கின்ற வகையில் செயல்பட உத்தரவிட்டிருக்கின்றோம். கோயம்பேடு மார்க்கெட் கழிவுகளை பயன்படுத்துகின்ற வகையில் மாஸ்டர் பிளான் தயாரித்துக் கொண்டிருக்கின்றோம். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களில் பயோ கியாஸ் பிளாண்ட் நிறுவுவதற்கு உண்டான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது, பிரபாகர் ராஜா எம்.எல்.ஏ., வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, முதன்மை செயல் அலுவலர் எம். லட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story