தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் இன்று குடமுழுக்கு விழா கோலாகலம்


தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் இன்று குடமுழுக்கு விழா கோலாகலம்
x

கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கோவில்களில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.

சென்னை,

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கோவில்களில் இன்று குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அந்த வகையில் கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே பு.சித்தேரி கிராமத்தில் பழமை வாய்ந்த சப்த கன்னியர் ஆலயத்தில் குடமுழுக்கு விழா விமரிசையாக நடைபெற்றது. சப்த கன்னியர்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே ஆவியூர் மதுரா ஐதராபாக்கம் கிராமத்தில் சக்தி விநாயகர், சுப்பிரமணிய சாமி கோவில் மற்றும் நவ கிரகங்கள் கோவிலில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது. திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மந்திவலசை பத்திரகாளி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் எடுத்து வரப்பட்டு கோவில் கும்பத்தில் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு விழா நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

அதே போல் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அத்திமலைபட்டு அண்ணாநகர் பகுதியில் அமைந்துள்ள பாலமுனீஸ்வரர் ஆலயம் பொதுமக்களால் புனரமைக்கபட்டு குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடத்தப்பட்டது. புனித நீரை சிவாச்சாரியார்கள் மேள தாளங்களுடன் கொண்டு வந்து ராஜ கோபுரத்தில் உள்ள கலசத்தின் மீது ஊற்றி குடமுழுக்கை நடத்தினர். தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.




Next Story