குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதள பணிகள் 2 ஆண்டுகளில் முடியும்- இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதள பணிகள் 2 ஆண்டுகளில் முடியும் என மதுரையில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார்.
அப்துல்கலாம் பிறந்த நாள்
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்த நாளை முன்னிட்டு ராமேசுவரத்தில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, இஸ்ரோ தலைவர் சோம்நாத் பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் நேற்று மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
ராமேசுவரம் செல்வதற்காக மதுரை வந்திருக்கிறேன். மதுரை மண் வீரமான மண். மதுரைக்கு வந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. தற்போது நாம் அனுப்பும் செயற்கைகோளை சுமந்து செல்லும் ராக்கெட்டுகளை மீண்டும் பயன்படுத்தும் வகையிலான சோதனைகளைச் செய்து வருகிறோம். ஒருமுறை கடலிலும், ஒருமுறை விமான ஓடுதளப் பாதையிலும் என இரண்டு முறை சோதனை செய்யப்பட்டு விட்டது. அடுத்த இறுதி கட்ட சோதனை விண்வெளிக்கு அனுப்பி சோதனை செய்வதுதான். ஆதித்யா வருகிற ஜனவரியில் எல்.1 சுற்றுப் பாதையை சென்றடையும். அதன் பிறகு அங்கு சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரத்தில் இருந்து ஆய்வு பணிகளை மேற்கொள்ளும்.
ராக்கெட் ஏவுதளம்
குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது. இங்கிருந்து ராக்கெட் ஏவப்பட்டால், பொருளாதார ரீதியாக இது மிகப் பெரிய லாபகரமாக அமையும். ஸ்ரீஹரிகோட்டாவில் சிறிய ராக்கெட்டுகளை ஏவும் போது அவை, இலங்கையை சுற்றிச் செல்ல வேண்டி இருக்கிறது. இதனால் அதிக செலவு ஏற்படுகிறது.
குலசேகரன்பட்டினத்தில் ஏவுதளம் அமைக்கப்பட்டால் அது நேரடியாக விண்வெளிக்கு சென்றடையும். எஸ்.எஸ்.எல்.வி. போன்ற சிறிய வகை ராக்கெட்களுக்கு குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் பயனுள்ளதாக இருக்கும். அங்கு நிலம் கையகப்படுத்த பணி ஏறத்தாழ நிறைவடைந்து விட்டது. சுற்றுச்சுவர் கட்டி பாதுகாப்பு பணிகள் நடக்கிறது. 2 வருடங்களில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு ராக்கெட் ஏவுதளம் பயன்பாட்டிற்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பூமியை தாக்கும் விண்கல்
இதற்கிடையே, நூறாண்டுகளுக்குப் பிறகு பூமியை தாக்கும் விண்கல் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, அமெரிக்காவில் உள்ள டார்க் மிஷின் போல நாமும் செய்ய வேண்டும். அந்த விண்கல் எங்கு வேண்டுமானாலும் விழும். அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்பட உலகத்தில் எங்கு வேண்டுமானாலும் விழலாம். உலக மற்றும் அனைத்து தேசங்களும் இணைந்து இதை கையாள வேண்டும். அதற்கு இந்தியாவிற்கு பலமான விண்வெளி தொழில்நுட்பம் வேண்டும் என்றார்.