கும்பாபிஷேக விழா சிறுவாபுரி முருகன் கோவிலில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு


கும்பாபிஷேக விழா சிறுவாபுரி முருகன் கோவிலில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
x

கும்பாபிஷேக விழாவையொட்டி சிறுவாபுரி முருகன் கோவிலில் போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆரணி அருகே சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் புகழ் பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த 2003-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது இந்த கோவிலை தமிழக இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் ரூ.1 கோடி செலவில் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

19 ஆண்டுகளுக்கு பின்னர், இந்த கோவிலுக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி கோவில் வளாகத்தில் கடந்த புதன்கிழமை முதல் பல்வேறு பூஜைகளுடன் விழா தொடங்கியது.

கும்பாபிஷேக விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர்.

அவ்வாறு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்றும், வாகனங்களை எங்கு நிறுத்துவது என்பது குறித்தும் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் தலைமையில், ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி, பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலையில் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் பொன்னேரி ஆர்.டி.ஓ. காயத்ரி, பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர், கோவிலின் செயல் அலுவலர் செந்தில் குமார், ஸ்தபதி நடராஜன், ஊராட்சி மன்ற தலைவர் ஜான்சி ராணி ராஜா, ஒன்றிய கவுன்சிலர் சந்துரு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் உடன் இருந்தனர்.

மேலும் அகரம் வழியில் வரும் வாகனங்களை பழைய சினிமா தியேட்டர் அருகேவும் புது ரோடு வழியாக வரும் வாகனங்களை சிவன் கோவில் அருகிலும், பேட்டை வழியாக வரும் வாகனங்களை கூட்டுறவு சங்க கட்டிடம் அருகிலும் என 3 பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தும் இடமாகவும் தேர்வு செய்துள்ளனர்.

மேலும் முக்கிய பிரமுகர்கள் வரும் வாகனங்களை கோவிலில் வடக்கு பகுதியில் உள்ள வாகனங்களை நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவையொட்டி கோவில் வளாகம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.


Next Story