கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை துணை தலைவர், உறுப்பினர்கள் முற்றுகை


கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை துணை தலைவர், உறுப்பினர்கள் முற்றுகை
x

கடிச்சம்பாடி ஊராட்சியில் அடிப்படை வசதிகள் செய்யவில்லை என கூறி கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை துணை தலைவர், உறுப்பினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

தஞ்சாவூர்

கும்பகோணம்:

முற்றுகை போராட்டம்

கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கடிச்சம்பாடி ஊராட்சியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சி தலைவர் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என கூறி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சிவபாலன் தலைமையில் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு முன்னதாக போலீசார் இரும்பு தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

போலீசாருடன் வாக்குவாதம்

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நாச்சியார் கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேகாராணி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இங்கு போராட்டத்தில் ஈடுபட அனுமதி இல்லை. அதனால் போராட்டத்தை கைவிடுங்கள் என்று கூறினர்.

அதற்கு போராட்டக்காரர்கள் அடிப்படை தேவைக்காக நாங்கள் போராட வந்துள்ளோம். இதனால் எங்களுக்கு உரிய பதில் கூறவேண்டும் என கூறி போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

தொடர்ந்து கும்பகோணம் வட்டார வளர்ச்சி அலுவலர் பூங்குழலி, தாசில்தார் வெங்கடேஸ்வரன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கடிச்சம்பாடி ஊராட்சியில் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் பூங்குழலி உறுதிஅளித்தார். இதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story