கொசஸ்தலை ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி


கொசஸ்தலை ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி
x

திருவள்ளூர் அருகே கொசஸ்தலை ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலியானார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் அடுத்த பட்டரைப்பெரும்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூங்காவனம் (வயது 61). இவரது மனைவி அன்பரசி. இவர்களுக்கு 3 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். பூங்காவனம் மாடுகளை வளர்த்து அதன் மூலம் பால் கறந்து விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார்.

நேற்று முன்தினம் காலை பூங்காவனம் வழக்கம் போல் மாடுகளை மேய்ப்பதற்காக வீட்டிலிருந்து ஓட்டிச் சென்றுள்ளார். ஆனால் மாலை அவர் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி மற்றும் மகன்கள் பூங்காவனத்தை பல இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

பின்னர் இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று காலை பூங்காவனம் மாடு மேய்க்க சென்ற இடம் மற்றும் கொசஸ்தலை ஆறு ஆகிய பகுதிகளில் போலீசார் மற்றும் உறவினர்கள் தேடினர்.

அப்போது கொசஸ்தலை ஆற்றங்கரை ஓரம் பூங்காவனம் உடல் ஒதுங்கியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். விசாரணையில் மாடு மேய்க்கும் இடத்தில் இருந்து வீட்டுக்கு செல்ல கொசஸ்தலை ஆற்றை கடந்து தான் செல்ல வேண்டும்.

எனவே நேற்று முன்தினம் மாலை பூங்காவனம் ஆற்றைக் கடக்கும்போது நீரில் சிக்கி இறந்திருக்கலாம் என்றும், அதன் பின்னர் அவரது உடல் ஆற்றின் கரையில் ஒதுங்கியிருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர். மாடு மேய்க்க சென்ற தொழிலாளி ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story