அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை - ஆர்.எஸ்.பாரதி


அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை - ஆர்.எஸ்.பாரதி
x
தினத்தந்தி 14 April 2023 12:58 PM IST (Updated: 14 April 2023 1:06 PM IST)
t-max-icont-min-icon

அண்ணாமலை ஒரு ஊழல் குற்றச்சாட்டை கூட வெளியிடவில்லை என்று ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

சென்னை,

திமுகவின் சொத்து மற்றும் ஊழல் பட்டியலை பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் வெளியிட்டார். திமுக அமைச்சர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை.. யார் யாருக்கு எவ்வளவு கோடி சொத்து என ஒரு வீடியோ வெளியிட்டார். இதன்படி திமுகவின் சொத்து மதிப்பு ரூ.1.31 லட்சம் கோடி என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், இது குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அண்ணாமலை ஒரு ஊழல் குற்றச்சாட்டை கூட வெளியிடவில்லை. அண்ணாமலை பேட்டி பட்டிமன்ற பேச்சை போல சிரிப்பை வரவழைக்கும் வகையில்தான் இருந்தது. அண்ணாமலையை எப்படி இவ்வளவு நாள் போலீஸ் துறையில் வைத்திருந்தார்கள் என வியப்பாக உள்ளது.

அண்ணாமலை யாருக்கு பூ சுற்றுகிறார் என தெரியவில்லை. பாஜக தலைவர் அண்ணாமலை மீது சட்டப்படி நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்படும். யார் யார் பெயரில் அவதூறு பரப்பினாரோ அவர்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள். அண்ணாமலை தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களுக்கு இனி செல்ல நேரிடும்.

எம்ஜிஆர் ஊழல் பட்டியலை வெளியிட்டபோது பார்த்தேன், படித்தேன், சிரித்தேன் என்றார் கருணாநிதி. 6 முறை ஆட்சியில் இருந்திருக்கிறோம்; எங்கள் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறதா?. திமுக சொத்து பட்டியலுக்கான ஆதாரங்களை 15 நாளில் அண்ணாமலை வெளியிட வேண்டும்.

அண்ணாமலை ஆளுமைமிக்கவர் கிடையாது. திமுக ஒரு சிறந்த புத்தகம். எதை பற்றியும் கவலையில்ல; எதையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். ரபேல் வாட்ச் பில் என ஏதோ ஒரு பேப்பரை காட்டி அண்ணாமலை ஏமாற்றியுள்ளார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா எவ்வளவு முயற்சி செய்தும் வழக்குப்பதிவு செய்ய முடியவில்லை. முதல்-அமைச்சரை களங்கம்படுத்தும் அண்ணாமலையின் என்னம் ஈடேறாது.


அனைவரின் நேரத்தையும் அண்ணாமலை வீணடித்துள்ளார். அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் விவரங்கள் ஆதாரமற்றவை. அண்ணாமலையின் அறியாமையை பார்த்தால் ஐபிஎஸ் எப்படி ஆனார் என சந்தேகம் வருகிறது. அண்ணாமலை பட்டியலில் வெளியிட்ட அனைவரும் ஏற்கனவே தேர்தலில் போட்டியிட்டவர்கள். தேர்தலில் போட்டியிடுபவர்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story