தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் புத்தக புரட்சி நடப்பதற்கு லியோனியின் பணிகளே காரணம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் புத்தக புரட்சி நடப்பதற்கு லியோனியின் பணிகளே காரணம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் புத்தக புரட்சி நடப்பதற்கு லியோனியின் பணிகளே காரணம் என்று அவர் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

'வளர்ந்த கதை சொல்லவா'

தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி எழுதிய ''வளர்ந்த கதை சொல்லவா'' புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, புத்தகத்தின் முதல் பிரதியை வெளியிட, அதை டி.ஆர்.பாலு எம்.பி. பெற்றுக்கொண்டார்.

விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

எழுத்திலும் சுவை

இதுவரைக்கும், தான் வளர்ந்த கதையைத்தான் பேச்சு வழியாக நம்முடைய லியோனி சொல்லிக்கொண்டிருந்தார். இப்போதுதான் முதன்முதலாகதான் வாழ்ந்த கதையை, வளர்ந்த கதையை எழுத்தாகவும் சொல்ல தொடங்கியிருக்கிறார்.

அவருடைய பேச்சு மாதிரியே எழுத்தும் அவருக்கு கை வந்திருக்கிறது. எல்லோருக்கும் இப்படி பேச்சும் எழுத்தும் ஒன்றாக கை வராது. அவருடைய எழுத்தும் சுவையாகத்தான் இருக்கிறது. பட்டிமன்ற மேடைகளில் லியோனியுடைய அடைமொழியே 'நகைச்சுவைத் தென்றல்'தான். தென்றல் எப்படி மிருதுவாக வருடி, ஒரு இதமான உணர்வை கொடுக்குமோ, அதே மாதிரி அவருடைய 'டைமிங் ஜோக்ஸ்' இருக்கின்றதே அதே மாதிரிதான் இருக்கும்.

நாவரசர்

அது பட்டிமன்றமாக இருந்தாலும் சரி, பாட்டுமன்றமாக இருந்தாலும் சரி, கருத்தரங்கமாக இருந்தாலும் சரி, விவாத மேடைகளாக இருந்தாலும் சரி, பொதுக்கூட்டங்களாக இருந்தாலும் சரி, தொலைக்காட்சியினுடைய விவாதங்கள், எதுவாக இருந்தாலும், தன்னுடைய நகைச்சுவை பேச்சால், அந்த மேடையில் இருக்கக்கூடிய பார்வையாளர்களை மட்டுமல்ல, வந்திருக்கக்கூடிய உங்களையும் தன்வசப்படுத்தக்கூடிய ஒரு ஆற்றல் அவருக்கு இருக்கிற காரணத்தால்தான் அவரை 'நாவரசர்' என்று கூட சொல்லலாம்.

அந்த அளவிற்கு ஒரு ஆற்றலை பெற்றிருக்கக்கூடியவர் நம்முடைய லியோனி. ஆரம்பக் காலங்களில் தமிழ்நாடே அவருடைய உரைகளை நேரடியாகவும், கேசட்டுகள் வாயிலாகவும் கேட்டு, மெய் மறந்து இருந்தது. தமிழ்நாடே மயங்கியபோது நான் மட்டும் விதிவிலக்கா என்ன? காரில் போகும்போதெல்லாம் அவருடைய கேசட்டுகளை நான் கேட்பதுண்டு.

புத்தக புரட்சி

இன்றைய தினம் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் இந்தளவு செயல்பட லியோனியின் ஆர்வம் அடிப்படை காரணமாக அமைந்திருக்கிறது.

அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றபோது, ஓராண்டு காலத்தில் 6 புத்தகம்தான் வெளியிட்டிருந்தார்கள். ஆனால், கடந்த 2 வருடத்தில் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு 120 புத்தகங்கள் வெளியாகி இருக்கிறது. அதற்கு முழு காரணம் நம்முடைய லியோனியினுடைய சீரிய முயற்சிதான். இன்னும் 150 புத்தகங்கள் தயாராகிக்கொண்டிருக்கிறது. இப்படி ஒரு புத்தகப்புரட்சி நடக்க லியோனியின் பணிகள் காரணமாக அமைந்திருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, எம்.பி.க் கள் ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், முன்னாள் எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், லியோ சிவக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story