காஞ்சிவாய் கிராமத்தில் முகாமிட்ட சிறுத்தை: பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம்


காஞ்சிவாய் கிராமத்தில் முகாமிட்ட சிறுத்தை: பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம்
x
தினத்தந்தி 8 April 2024 3:54 AM GMT (Updated: 8 April 2024 4:38 AM GMT)

வனத்துறையினர் ஏற்பாடு செய்துள்ள கூண்டில் சிக்காமல் சிறுத்தை தொடர்ந்து போக்கு காட்டி வருகிறது.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியான கூறைநாடு செம்மங்குளம் பகுதியில் கடந்த 2-ந்தேதி சிறுத்தையின் நடமாட்டம் தென்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க ஆங்காங்கே கேமராக்கள் பொருத்தப்பட்டன.

இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி சிறுத்தையின் புகைப்படம் சென்சார் கேமராவில் பதிவானது. இதை நேற்றுமுன்தினம் மயிலாடுதுறை மாவட்ட வனத்துறையினர் வெளியிட்டனர். அதில் சிறுத்தையின் உருவம் தெளிவாக பதிவாகி இருந்தது. முன்னதாக கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர் நாகநாதன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

குறிப்பாக நேற்று முன்தினம் இரவு மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரம், ரெயில் நிலையம் உள்பட 6 இடங்களில் 7 கூண்டுகள் வைக்கப்பட்டு சிறுத்தை பிடிக்கும் பணியை வனத்துறையினர் தீவிரப்படுத்தினர். எந்த கூண்டிலும் சிறுத்தை சிக்காத நிலையில் நேற்று மயிலாடுதுறை ரெயில் நிலையம் அருகே காவிரி ஆற்றுப்பாலம் கீழே சிறுத்தையின் காலடி தடங்கள் இருப்பதாக தகவல் வந்தது.

இதைத்தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் ரெயில் நிலையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அந்த பகுதியில் சிறுத்தையின் கால்தடங்கள் எதுவும் தெரியாத நிலையில் காவிரி கரையில் முடியுடன் கூடிய கழிவை வனத்துறையினர் கைப்பற்றினர்.இது சிறுத்தையின் கழிவு போன்று இருப்பதால் அதை மருத்துவ பரிசோதனைக்காக கொண்டு சென்றுள்ளனர்.

இந்தநிலையில், மயிலாடுதுறையில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காஞ்சிவாய் கிராமத்தில் சிறுத்தை முகாமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கால் தடத்தை ஆய்வு செய்து சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு உள்ளனர். கூண்டில் சிக்காமல் தொடர்ந்து 6-வது நாளாக சிறுத்தை போக்கு காட்டி வருகிறது.


Next Story